மதுரை, ஜன.31-
“டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்” என்று அ.வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது.
இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூரை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் கோரிக்கைகள் விடுத்து போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி அ.வல்லாளப்பட்டிக்கு வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்காது என உறுதி அளித்தார்.
மேலும், கிராம பிரதிநிதிகளை, டெல்லி அழைத்துச்சென்று மத்திய சுரங்க மந்திரி கிஷன் ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்தார். அங்கு நடத்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா அ.வல்லாளப்பட்டியில் நேற்று நடந்தது.
இதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று விமானத்தில் புறப்பட்டு மதியம் 3 மணி அளவில் மதுரை வந்தார். அவருடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் வந்தார். அவர்களுக்கு, மேலூரை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காரில் புறப்பட்ட அவர்களுக்கு, அழகர்கோவில் பகுதியில் வைத்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அ.வல்லாளப்பட்டி பகுதியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இதில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:-
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் சென்று, தமிழர்களின் பெருமையை பறைசாற்றி வருகிறார்.
இப்பகுதியில் டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைக்கக்கூடாது என்று கிராம மக்கள் டெல்லியில் என்னை சந்தித்தனர்.
அப்போது பிரதமரிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்துக்கூறி திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தேன் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கிஷன் ரெட்டிக்கு கிராம மக்கள் சார்பில் கள்ளழகர் சிலை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. அண்ணாமலை, ராம.சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பான மத்திய அரசின் அரசாணை கல்வெட்டாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதே போல் அரிட்டாபட்டியிலும் பாராட்டு விழா நடந்தது.