மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை
சென்னை, ஜன.27-
மதுரையில் ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை போலீசார் ரத்து செய்து உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாப்பட்டி உள்பட சுற்றி உள்ள 11 கிராம மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கடந்த 7-ந் தேதி அன்று மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகளும், கிராம மக்களும் திரண்டனர். மதுரை மாநகரமே குலுங்கும் வகையில் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திகைத்து போயினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கிராம மக்கள் மீது மதுரை தல்லாகுளம், மேலூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பாய்ந்தன. ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் ‘டங்ஸ்டன்’ திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதியின்படி கிராம மக்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழக சட்டசபையில் ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும், தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.
இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் போலீஸ் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023-ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.