எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை, டிச.27-–
மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் பகுதி வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியைஉடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 30–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகும் அபாய நிலை தொடர்கதையாக உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் நலன்களை பாதிக்கும் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தி.மு.க. அரசு இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஏலம் நடைபெற்று, அதன் முடிவு கடந்த 7.11.2024 அன்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தச் சுரங்கம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக அண்ணா தி.மு.க. பல்வேறு வகைகளில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்ட தி.மு.க. அரசின் முகத்திரையை, தகுந்த ஆதாரங்களோடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் தோலுரித்துக் காட்டியதும், தி.மு.க. அரசின் முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சரும், பல்வேறு வகைகளில் மடைமாற்றவே முயற்சித்தனர். தி.மு.க. அரசின் பதற்றத்திற்கான காரணம், சமீபத்தில் வெளிவந்த மத்திய அரசின் விளக்கம் வாயிலாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.
ஏலம் அறிவிப்பு முதல், ஏலம் முடிவு வரை தி.மு.க. அரசு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. 3.10.2023 அன்று துரைமுருகன் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்திலும்கூட, டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், மாறாக, ஏலத்தை மாநில அரசே ஏற்று நடத்த உரிமை வழங்கக் கோரி தான் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என தி.மு.க. -வின் மொத்த சதித் திட்டத்தையும் மத்திய அரசின் விளக்கம் அம்பலப்படுத்திவிட்டது.
மக்கள் நலனை பாதிக்கும் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்த தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், அண்ணா தி.மு.க. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 30–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையிலும்; மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. பெரியபுள்ளான் (எ) செல்வம் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.