நாடாளுமன்றத்தில் சட்டம் வந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் எதிர்க்கவில்லை
சென்னை, டிச.9–
டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் தி.மு.க. அரசு கடந்த 10 மாதமாக என்ன செய்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
பாராளுமன்றத்தில் இதுசம்பந்தமாக கனிம திருத்த சட்டம் கொண்டு வந்தபோது தி.மு.க. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேட்டார்.
இன்று சட்டசபைக்கு வெளியே அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால், முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். முதலமைச்சரின் கடிதத்துக்கு மத்திய அமைச்சகம் அளித்துள்ள பதிலில் ஏன் ஒப்பந்தம் இறுதி செய்யும் வரை 10 மாத காலமாக சுரங்க உரிமத்தை ரத்து செய்ய எந்த கோரிக்கையும் மாநில அரசு வைக்கவில்லை என்று கேட்டிருக்கிறது. இதனைத்தான் நானும் சட்டசபையில் கேட்டேன்.
ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே பிரதமரிடம் முதலமைச்சர் கூறியிருந்தால் இப்போது இந்த பிரச்சினை வந்திருக்காது. ஆனால் அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டசபையில் விளக்கம் தராமல் பூசி மெழுகுகிறார்.
பிரதமரை முதலமைச்சர் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து பேசி தடுத்திருக்கலாமே? அதனை ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை? இந்த தீர்மானத்தை அன்றே நிறைவேற்றி அனுப்பி இருந்தால் எளிதாக இந்த பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசு இதனை செய்ய தவறிவிட்டது. இதுபற்றி எல்லாம் சொன்னால் கோபம் மட்டும் வருகிறது.
அனுமதிக்க மாட்டோம்
தமிழக மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் நிலைப்பாடு. அந்த பகுதி மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம்.
2023–ம் ஆண்டு கனிம திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் திருத்த சட்டம் கொண்டு வந்தபோது ஏன் தி.மு.க. எம்.பி.க்கள் அதனை எதிர்க்கவில்லை? அப்போதே எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறாமல் தடுத்திருக்கலாம். நிறுத்தி இருக்கலாம். 2023–ம் ஆண்டு கனித திருத்த சட்டம் வந்தபோது அதனை எதிர்க்கவில்லை. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே?
பாரதீய ஜனதாவுடன் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா தி.மு.க. குரல் கொடுத்தது. 22 நாட்கள் சபையை நடக்கவிடாமல் முடக்கினோம். ஆனால் இன்றைக்கு இதுபோன்ற கடமையை செய்ய தி.மு.க. தவறிவிட்டது. தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்ததால் தான் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.