சிறுகதை

ஞானோதயம் – ஆவடி ரமேஷ்குமார்


தன் ஹோட்டலுக்கு வந்து சிக்கன் பிரியாணியை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிடும் அந்த முதியவரையே விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.

முதியவருக்கு எப்படியும் எண்பது வயதுக்கு மேலிருக்கும்.முகத்தில் தாகூரைப்போல நீளமான தாடி வைத்திருந்தார்.

பேன்ட்,சட்டை அணிந்திருந்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கல்லாவுக்கு அருகே வந்து பணத்தை நீட்டினார்.

” அய்யா உங்களுக்கு எண்பது வயது இருக்குமா?” கேட்டான் ஹரி.

” எண்பத்தெட்டு ஆச்சுங்க”

” அப்படியா” என்று வியந்த ஹரி பணத்தை வாங்கிக்கொண்டு மேலும் பேச்சுக் கொடுத்தான்.

” நானெல்லாம் அறுபது வயசு வரைக்கும் இருப்பேனானு சந்தேகமா இருக்கு.சுகர்,பிரஷர்,

கொலஸ்ட்ரால்னு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு”

“எனக்கும் இருக்குதுங்க”

” ஏன் தாடி விட்டுட்டீங்கய்யா?”

” என் மனைவி இறந்து ஆறு மாசம் ஆச்சு.அவளை மறக்க முடியலை.அதான் அவள் நினைவா விட்டுட்டேன்.வாய்க்கு ருசியா சமைச்சு போடுவா.என்னை நல்லா பாத்துக்குவா.இப்ப நாயாட்டமா ருசியான சாப்பாட்டுக்கு அலையறேன்”

என்று சொல்லிக்கொண்டே போனார் முதியவர்.

அவரின் மேல் பரிதாபம் ஏற்பட,

” உங்களுக்கு எத்தனை புள்ளைங்கய்யா?” என்று கேட்டான் ஹரி.

” ஒரே பையன் தான்.என் சொத்தையெல்லாம் அவன் பேர்ல மாத்தி எழுதிட்டான்.நான் மிலிட்ரிலயிருந்து ரிடையர்டு ஆனவன்.மாதம் பதினாறாயிரம் பென்சன் வருது.அதையும் முழுசா வேணுங்கிறான்” கண்கள் கலங்க தொடர்ந்து பேசினார்.

” மருமகள் எனக்கு சாப்பாடு போடறதில்லே.ஏன்னு கேட்டா ‘பென்சன் பணம் முழுவதையும் கொடுங்க’ னு கேட்கிறாள். நான் மாசம் ஐயாயிரம் கொடுத்திட்டிருந்தேன்.

இப்ப அதை கொடுக்கறதில்லே. டெய்லி மூனு வேளையும் ருசியான சாப்பாட்டுக்கு அலையறேன். இந்த ஓட்டல்ல பிரியாணி சூப்பராயிருக்கும்னு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.அதான் இன்னிக்கு இங்க வந்தேன்”.

” சொந்த வீடு இருக்குங்களா அய்யா?”

” ம்.இருக்கு.நான் கட்டின வீட்டை பழசுனு இடிச்சிட்டு புது வீடு ஒண்ணு கட்டியிருக்கான் என் பையன்.அதுல எனக்கு ஒரு சின்ன ரூம் ஒதுக்கியிருக்கான்.எப்ப சாவு வரும்னு என் மனைவியை நினைச்சிட்டே வாழ்ந்திட்டிருக்கேன்”

கண்களை துடைத்துக்கொண்டு அந்த முதியவர்,”சரிங்க தம்பி நான் வரேன்” என்று சொல்லிவிட்டு ஹோட்டலைவிட்டு வெளியேறினார்.

அப்போது ஹரியின் செல்போன் ஒலித்தது.எடுத்துப்பார்த்தான்.வக்கீல் மூர்த்தி!

” ஹலோ”

” என்ன சார்,டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண சொல்லியிருந்தீங்க.நான் கொடுத்த பேப்பர்களில் உங்க மனைவிகிட்ட கையெழுத்தை வாங்கிட்டீங்களா?”

” இன்னும் இல்ல சார்”

” இன்னிக்கு உள்ள கொடுத்தர்லாம்னு போன் பண்ணினேன்.சரி எப்ப கையெழுத்து வாங்கி தரப்போறீங்க?”

மௌனமாயிருந்தான் ஹரி.

” ஹரி சார்,லைன்ல இருக்கீங்களா?”

” இருக்கிறேன் சார்.இந்த டைவர்ஸ் மேட்டரை கேன்சல் பண்ணிடலாம் சார்”

” ஏன் திடீர்னு பல்டி அடிக்கிறீங்க.நீங்க தானே உங்க மனைவியை விட்டு விலகி தனியா வாழலாம்னு இருக்கறதா சொன்னீங்க.அதுக்கு பல காரணங்கள் வேற சொன்னீங்க.இப்ப…?!”

” சொன்னேன்.இன்னிக்கு ஒரு முதியவர் மூலமாக எனக்கு

‘ ஞானோதயம்’ கிடைச்சுது.எனக்கு என் மனைவி வேணும் சார்.அவ ரொம்ப நல்லவ சார். போனை வைக்கிறேன்”.

இப்போது ஹரியின் மனதில் சந்தோஷம் நிறைந்திருந்தது.


Leave a Reply

Your email address will not be published.