போஸ்டர் செய்தி

ஜோ ரூட் அதிரடி: இங்கிலாந்து வெற்றி

Spread the love

சவுதாம்டன், ஜூன் 15–

நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வீத்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டி நேற்று சவுதாம்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. ‘பூவா தலையா’ போட்டதில் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்களில் லூயிஸ் (2) விக்கெட்டை இழந்தது. கெயிலுடன் ஹோப் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். இந்நிலையில் 36 ரன்னில் கிறிஸ்கெயில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

பின்னர் ஆடிய ஹோப் (11), ஹெட்மயர் (39), ஹோல்டர் (9), ரசல் (21) அவுட் ஆகினர். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் மட்டும் அரைசதம் பூர்த்தி செய்து 63 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது.

பேர்ஸ்டோ–ஜோ ரூட் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நல்ல துவக்கத்தை தந்த இந்த ஜோடி 95 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. பேர்ஸ்டோ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் இந்த உலகக்கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து 33.1 ஒவர்களில் வெற்றி இலக்கை எளிதாக எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜோ ரூட் 100 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *