செய்திகள்

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூலை 8–

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப்பிரிவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963–ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2014–ம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் 2020 செப்டம்பரில் ஓய்வு பெற்றபின், தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அந்த சமயத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப்பிரிவை மூடும் முடிவு 2022 ஜூன் வரை ஒத்திவைக்கப்பட்டது.

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு தேவையான நிதியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை, 2019–ல் முந்தைய ஆட்சியாளர்கள் தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த முதலமைச்சர், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இவ்வரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும் நல்வாய்ப்பிற்கு உதவிடும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலகளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *