ஜெய்ப்பூர், அக். 19–
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 189 பேருடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஜெய்ப்பூருக்கு திரும்பிய விமானம்
இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அதிகாலை 1.20 மணியளவில் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமான முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.