காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு
ஸ்ரீநகர், மே 5–
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதை தாக்கி அழித்த இந்திய ராணுவத்தினர், அங்கிருந்து 5 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் இருக்கும் தங்களது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை மீட்பதற்காக எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், காஷ்மீரில் உள்ள அனைத்து சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் கூட்டாக இணைந்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில மணிநேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜெயில்களை
தகர்க்க திட்டம்
புதுடெல்லி:
எந்த நேரத்திலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீதி அடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை பகுதிகளில் உள்ள பயிற்சி முகாம்களை மூடி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை விமானப்படை தளபதி சந்தித்து பேசினார். அப்போது ரபேல் போர் விமானங்கள் உள்பட தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். இதனால் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இன்று காலையிலும் ராணுவ உளவுத்துறை புதிய எச்சரிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
அந்த எச்சரிக்கை தகவலில் காஷ்மீரில் உள்ள ஜெயில்களில் இருக்கும் தங்களது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை மீட்பதற்காக எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய ஜெயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு படை
வீரர்கள் குவிப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் முக்கிய தீவிரவாதிகள் இருக்கும் ஜெயில்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்முவில் உள்ள சிறையில் மிக முக்கியமான தீவிரவாதிகள் சிலர் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் மத்திய ஜெயிலிலும் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 2 ஜெயில்களிலும் இன்று காலை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் குறிப்பிட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் ஒருங்கிணைந்து அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தீவிரவாதிகள் மறைவிடம் அமைத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.ஆனால் தீவிரவாதிகள் யாரும் அந்த முகாம்களில் இல்லை. அவர்கள் வைத்திருந்த குவியல் குவியிலான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 4 கண்ணி வெடிகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன.