கட்டபொம்மன் – 14
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின் அவர்களது குடும்பம் என்ன ஆனது என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கட்டபொம்மனின் தாயார் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன், அவரது குழந்தைகள் என 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்படும் போது ஜக்கம்மாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
சிறையில் தான் ஜக்கம்மாளுக்கு குழந்தை பிறக்கிறது. சிறையில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆங்கிலேயர்கள் “கம்பெனி செல்வம்” என பெயர் சூட்டுகிறார்கள். ஊமைத்துரையின் மனைவி சவுந்தரவடிவுக்கும் சிறையில் தான் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் பெயர் துரைசூடாமணி.
கட்டபொம்மனின் உறவினர்கள் அனைவரும் திருச்சி, பாளையங்கோட்டை, பூந்தமல்லி போன்ற இடங்களில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள்.
பூந்தமல்லியில் கம்பெனி செல்வம் இருந்ததற்கான கடித ஆதாரம் இருக்கிறது. அதனை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலேயர் உத்தரவில்லாமல் இவர்கள் எங்கேயும் போக முடியாது.
பக்கோடா கேட்டு கடிதம்
கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள் 1813ல் தான் இறக்கிறார். அவரது உடலை எரியூட்டுவதற்கு பணம் கேட்டு ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர்கள் பணம் அனுப்பி தருகிறார்கள்.
இவர்கள் வீட்டுக்காவலில் இருப்பதால் இவர்களுக்கான செலவுகள் அனைத்துக்கும் ஆங்கிலேயர்கள் தான் பணம் கொடுத்து உள்ளனர். அந்த கால வழக்கத்தில் பணத்தை “பக்கோடா” என்று அழைப்பது வழக்கம். ஒரு பக்கோடா என்பது மூன்றரை ரூபாய்க்கு சமம்.
குடும்பம் பெரிதாகி வருவதால் “பக்கோடாவை” உயர்த்தி தரச்சொல்லி கடிதம் எழுதுகிறார்கள்.
ஒரு கடிதத்தில் எங்களது பாட்டி, அதவாது கட்டபொம்மனின் அம்மா ஆறுமுகத்தம்மாள் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
சுமார் 70 ஆண்டு காலம் கட்டபொம்மனின் குடும்பம் திருச்சி சிறையில் இருந்துள்ளனர். ஆங்கிலேயர்கள் அனுமதியின்றி இவர்கள் வெளியில் வர முடியாது. அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே வெளியில் வர முடியும். இவர்கள் எங்கு சென்றாலும் மீண்டும் சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
லண்டனில் கட்டபொம்மனின் உருவம் (பாக்ஸ் செய்தி)
இங்கிலாந்து ராணி ஒரு சமயம், வீரபாண்டிய கட்டபொம்மன் இவ்வளவு வீரம் உள்ளவராக இருக்கிறோரே…! அவர் உருவம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, கட்டபொம்மனின் உருவம் வரைந்து லண்டனுக்கு அனுப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் அந்த உருவம் லண்டன் மியூசியத்தில் உள்ளது.
எங்களது சித்தப்பாவுக்கு தெரிந்த நபர் ஒருவர் அந்த ஓவியத்தை லண்டன் மியூசியத்தில் பார்த்துள்ளார். அந்த ஓவியம்தான் கட்டபொம்மனின் உருவமாக இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டபொம்மனின் வீரவாளும் அங்கு உள்ளது. 1875ல் வேல்ஸ் இளவரசர் இங்கு வந்த போது, மணியாச்சியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவில்பட்டிக்கு செல்கிறார் வேல்ஸ். அங்கிருந்து மதுரைக்கு சென்று உள்ளார். வழியில் திருமலை நாயக்கர் மஹாலை பார்க்கிறார்.
சிவகங்கை சீமை ராணி காத்தமை நாச்சியார் வேல்ஸ் அதிகாரியை சந்தித்துள்ளார். அவரது கோரிக்கை ஒன்றை ஆங்கிலேய அரசு நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வேல்ஸ்க்கு நிறைய பரிசுகளை வழங்கி உள்ளார்.
அப்போது கட்டபொம்மனின் வாளையும் பரிசாக கொடுத்துள்ளார் காத்தமை நாச்சியார். ராயல் கலெக்சன் டிரஸ்ட்டில் பக்கிங்காம் அரண்மனையில் இன்றும் அந்த வாள் உள்ளது.
![]()





