செய்திகள்

ஜெயலலிதா 72–வது பிறந்த நாள்: அன்னதானம், மருத்துவமுகாம், பேச்சு, கட்டுரை போட்டிகள்

Spread the love

சென்னை, பிப்.7–

ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளையொட்டி அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், கவிதை, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்த அண்ணா தி.மு.க. மாணவர் அணி முடிவு செய்துள்ளது.

அண்ணா தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்து சொல்வதுடன் பள்ளி, கல்லூரிகள்தோறும் சாதனை விளக்க பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

நடைபெற இருக்கும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும், 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற மாணவர் அணி சூளுரைத்தது.

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் மாணவர் அணிச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.ஆர். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மாணவர் அணி துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா. கண்ணன், எம்.டி.பாபு, கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், வி.எம். ஆசைத்தம்பி, மாணவர் அணி இணைச் செயலாளர் பி. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.டி.பிரசாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் என். தமிழ்மணி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ. மகாராஜேந்திரன் ஆகியோர் வரவேற்று பேசினார்.

அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெ. ஜெயவர்தன், இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ் ஆகியோர் பேசினார்கள்.

வேலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வி.ஏ. பிரகாஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும் தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து தமிழக மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்டவரும், உலகத் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், இந்த உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தை வளர்த்து 6-வது முறையாக முதலமைச்சராக ஆட்சி நடத்தி மறைந்தும், மறையாமல் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் மங்காப் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கும், மாணவச் சமுதாயத்தின் ‘‘அட்சயப் பாத்திரம்”, அம்மாவின் 72-வது பிறந்த நாள் தினத்தில் அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், கவிதை, கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் முதலானவற்றை, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி அம்மாவின் பிறந்த நாளை ‘‘மாணவச் சமுதாயத்தின் எழுச்சி நாளாக” தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடுவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது. கல்வியில் முன்னோடி மாநிலம்

‘‘எந்தவொரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்ற தொலைநோக்கு சிந்தனையுடைய மறைந்த முதலமைச்சர் அம்மாவின் நல்லாசியோடு செயல்படும் கழக அரசு, அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்றிடவும், உயர்கல்விக்கு ரூ. 4,584 கோடி மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 28,757 கோடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து, உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49.8% பெற்று, இந்தியாவில் தமிழகம் கல்வித் துறையில் முதன்மை பெற்று விளங்கும் வகையில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு வரும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. தி.மு.க.வுக்கு கண்டனம்

மத்திய காங்கிரஸ் அரசில் 16 ஆண்டுகள் பங்குகொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய ஜீவாதார உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், அதிகார முறைகேடுகள், நில அபகரிப்புகள் முதலானவற்றின் உண்மைகளையும் குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்ற தி.மு.க.வும், அதன் தலைவர் ஸ்டாலினும் பொய் அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திவிடலாம் என்றும், மக்களை ஏமாற்றிவிடலாம் என்றும், பொதுமக்களை நம்ப வைத்துவிடலாம் என தினந்தோறும் பொய்யான வெற்று அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும், காங்கிரசையும் கழக மாணவர் அணி வன்மையாக கண்டித்து தீர்மானிக்கிறது. சாதனை விளக்க

பிரச்சாரம்

இந்தியாவின் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத திட்டங்களை நித்தம், நித்தம் சிந்தித்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், நெசவாளர்கள் மனநிறைவு பெறவும், ஏழை, எளிய மக்கள் வாழ்வின் வசந்தத்தை ஏற்படுத்தவும், இளைஞர்கள், மாணவ – மாணவிகள் கல்வியில் சிறப்பு பெற்று விளங்கவும், தமிழக மக்களின் மேன்மை, வளர்ச்சி பெறவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி, தமிழகத்தை அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, அமைதி, வளம், வளர்ச்சி” என்ற உயர்ந்த சிந்தனையோடு அம்மாவின் வழியில் செயல்பட்டு வருகின்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையிலான கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டித் தொட்டியெங்கும் பள்ளி, கல்லூரிகள் தோறும் சாதனை விளக்க பிரச்சாரத்தினை தொடர்ந்து மேற்கொள்வதோடு, 2021-ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் 100 சதவீதம் முழுமையான வெற்றியைப் பெற்று புதிய வரலாற்றுச் சரித்திரம் படைத்திட தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றுவது என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.

மாநகராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி

தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து தமிழக மக்களின் மேன்மையையும், வளர்ச்சியையும் மட்டுமே ஒரே குறிக்கோளாக தன் வாழ்வின் இலக்குகளாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அம்மாவின் நல்லாசியோடு, கழக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளாக தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான கச்சத் தீவை மீட்பதற்கு நீதிமன்றத்தின் மூலம் உரிமையினை நிலைநாட்டவும், சரித்திர சாதனைத் திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அம்மா திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், குழந்தைகள் நலன் காக்கும் வகையில் 16 வகையான அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு, தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, நோட்டு புத்தகம், பாட புத்தகம், சீருடை, காலணிகள், கல்வி உதவித் தொகைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், மானிய விலையில் மகளிர் இரு சக்கர மோட்டார் வாகனம் வழங்கும் திட்டம் என இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத பல்வேறு திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக வழிநடத்தி வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வழியில் நடைபெற இருக்கின்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க அயராது கழக பணியாற்றுவது என கழக மாணவர் அணி உறுதி ஏற்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *