போஸ்டர் செய்தி

‘ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்’: முதல்வர் எடப்பாடி தாக்கு

தூத்துக்குடி, மே.8–

அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குக் காரணம் தி.மு.க. தான். அம்மா மீது பொய் வழக்குப் போட்டு, அவரை சிறைக்கு அனுப்பி, அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, உடல் நிலை நலிவுற்றதன் காரணமாகவே அம்மா மரணமடைந்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது புகார் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக் குளம், மாப்பிள்ளையூராணி, முத்தையாபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து, முதலமைச்சரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பொது மக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது :-

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவினால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் இயக்கம் தான் அண்ணா தி.மு.க. அந்த இரு பெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை அடிப்படையாக கொண்டு தான் அம்மாவுடயை அரசும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது ஆட்சியில் இருக்கும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் தான் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொகுதியில் நிறைவேற்ற முடியும். எனவே, வாக்காளர் பெருமக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களும் எங்களை நம்புகிறார்கள். ஆனால், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவ்வாறு இல்லாமல் தலைவர் என்ற கர்வத்தில் பேசி வருகிறார்.

அம்மா தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களின் அன்பையும், பேராதரவையும் பெற்றதன் காரணமாக 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அண்ணா தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வரலாற்றிலேயே ஆளுகின்ற ஒரு கட்சி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது என்றால் அது அண்ணா தி.மு.க. தான். இதற்கு காரணம் அம்மா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே ஆகும். அவ்வாறு ஆற்றல் மிக்க தலைவியாக அம்மா விளங்கினார்.

அம்மாவின் மறைவுக்குக் காரணம் தி.மு.க. தான். அம்மா மீது பொய் வழக்குப் போட்டு, அவரை சிறைக்கு அனுப்பி, அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, உடல் நிலை நலிவுற்றதன் காரணமாகவே அம்மா மரணமடைந்தார்.

அண்ணா தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். அம்மாவுக்கு தண்டனை கிடைக்கப் பெற்று அவர் முதலமைச்சராக தொடர முடியாத நிலையில் சாதாரண தொண்டராகிய ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார். ஆனால், தி.மு.க.வில் அது நடக்குமா என்றால், அது நடக்காது. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஆகியோர் தான் அந்த பொறுப்புகளை ஏற்கக் கூடிய நிலை உள்ளது.

முதல்வர் பதவி மீது ஸ்டாலினுக்கு கண்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்போது பேசினாலும், முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார். எப்போதுமே முதலமைச்சர் பதவி மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார். நாங்கள் வேண்டாம் என்றா சொல்லுகிறோம். மக்கள் நினைத்தால் அதை அவர் வாங்கிக் கொள்ளட்டும். எனக்கு பதவி ஆசை கிடையாது. மக்கள் அளித்த பேராதரவின் மூலமாக அம்மாவின் ஆசியோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்கள் பணி ஆற்றி வருகிறேன். யாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் மக்கள் தான். எனவே, வாக்காளப்பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நான் முதலமைச்சராகுவேன் என்கிறார். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் ஸ்டாலின் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் எனத் தெரிவிக்கிறார். ஒரே கட்சியில் தலைவர் ஒரு நிலைப்பாட்டையும் அந்த கட்சியில் உள்ள மற்றொருவர் ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் போது மக்கள் எதை நம்புவார்கள். இது போன்ற முரண்பட்ட பேச்சுக்களை வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.

மழை காலங்களில் பெய்கின்ற மழை நீரை முறையாக சேமிக்கின்ற வகையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.425 கோடி மதிப்பில் 3000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. அதே போன்று தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்க சேலம் – கள்ளக்குறிச்சி இடையே 900 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் நாட்டு மாட்டினங்கள், ஆடு, கோழி, மீன் வளர்ப்பு குறித்து தெரிந்து கொள்ளவும், அவ்வினங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும். 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எந்த நேரத்தில் மின்சாரம் போகும் என்று தெரியாமல் விவசாயிகளும், தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம்

ஆனால் 2011ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அம்மா எடுத்த நடவடிக்கை காரணமாக 3 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்கி காட்டினார். தற்போது தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு 304 நிறுவனங்கள் மூலம் ரூ.3,00,431 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே மாணவர்கள் அறிவுப்பூர்வமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 37 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி ரூ.5,550 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.5,300 கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டில் 15 லட்சம் வீடுகள் கட்டப்படும்

அம்மா தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என முயற்சி எடுத்தார். அவர் எடுத்த முயற்சியின் பயனாக தற்போது மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,237 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நகர்புறத்தில் வாழும் வீடற்ற ஏழை, எளியவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கன்கிரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.

ரூ.5 கோடி செலவில் தார்சாலைகள் மேம்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்படும். கொம்பாடி ஓடையிலிருந்து மறவன்மடத்து கால்வாயை விரிவுபடுத்தி புதிய வரத்துக் கால்வாய் அமைக்கப்படும். புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். புதியம்புத்தூர் ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்த அம்மாவுடைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். மேலும், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்ற அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, அண்ணா தி.மு.க. சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பெ. மோகன் திறமையானவர், நல்ல பண்பாளர், சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றித்தரும் ஆற்றல் மிக்கவர். அரசின் திட்டங்கள் இந்தப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட பணியாற்றக் கூடியவர் எனவே, அவருக்கு எம்.ஜி.ஆர். கண்ட, அம்மாவினால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *