சென்னை, பிப்.24–
ஜெயலலிதாவின் 76–வது பிறந்த நாளான இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆருடைய உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ‘‘ஜெயலலிதாவின் 76–வது பிறந்த நாள் விழா’’ சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி கழகக் கொடியினை ஏற்றி வைத்து, அங்கே குழுமியிருந்த கழக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மருத்துவ முகாம்
அதனையடுத்து, அம்மாவின் பிறந்த நாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி தமது திருக்கரங்களால்,
* கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கரால், தலைமைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் எடப்பாடி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில், பொது மருத்துவம், இ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டும்; இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்நிகழ்வின்போது, கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் எம்.ராமசாமி மற்றும் டாக்டர் டி.அருண்குமார் உள்ளிட்ட மருத்துவர்களும் உடன் இருந்தனர்.
கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ப் வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தயார் செய்யப்பட்டிருந்த 76 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி கழக நிர்வாகிகள், பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்.
தேர்தல் பிரச்சார முழக்க லோகோ
தலைமைக் கழக மெயின் ஹாலில், எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் நல்லாசியோடு, நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான கழகத்தின் முதன்மை முழக்கமாக தமிழர் உரிமை மீட்போம்; தமிழ் நாடு காப்போம்’’ என்ற லோகோவை வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான ஆதிராஜாராம் ஏற்பாட்டின்பேரில், தலைமைக் கழகம் எதிரில், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி, 119 கிழக்கு வட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, கழக இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி. சிவராஜ் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில், 1000 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிடும் வகையில், 2 பேருக்கு தையல் மெஷின், 4 பேருக்கு கிரைண்டர், 2 பேருக்கு இட்லி குண்டான், 2 பேருக்கு ஹாட் கேரியர், 2 பேருக்கு ஹாட் பாக்ஸ், 2 பேருக்கு சில்வர் தட்டு, 2 பேருக்கு சேலை, 2 பேருக்கு டிபன் செட், 10 பேருக்கு கை கடிகாரம் வழங்கியதோடு, 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கிடும் நிகழ்ச்சியையும் துவக்கி வைத்து சிறப்பித்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சா. கலைப்புனிதனால் தயார் செய்யப்பட்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மணிமொழிகள் பாகம் – 1’’, புரட்சித் தலைவி அம்மாவின் பாதம் தொழுவோம்’’ என்ற நூல்களை வெளியிட, அதனை முனைவர் சா. கலைப்புனிதன் பெற்றுக்கொண்டார்.
ஜெயலலிதாவின் 76–வது பிறந்த நாளையொட்டி, தலைமைக் கழக வளாகம் அமைந்துள்ள சாலையின் இரு மருங்கிலும் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு பேண்டு வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க, ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், அண்ணா தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் எந்திய வண்ணம், பூரண கும்ப மரியாதை வழங்கி எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, கே.ஏ.செங்கோட்டையன், பொன்னையன், செல்லூர் ராஜூ, என்.தளவாய்சுந்தரம், வைகை செல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் பி.சத்தியா, ஆதிராஜாராம், ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, எம்.கே.அசோக், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், மாணவர் அணி துணை செயலாளர் ஆ.பழனி, இ.எஸ்.சதீஷ்பாபு, வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், பகுதி செயலாளர் வி.எம்.ஜி. கோபால், வட்ட செயலாளர் கே.துளசி, வி.எஸ். வேல் ஆதித்தன், டி.சி.கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் டி.எச்.ஷாநவாஸ் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.