செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு 24–ந் தேதி எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை

அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் 73–வது பிறந்த நாள் விழா

ஜெயலலிதா சிலைக்கு 24–ந் தேதி எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை

அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்

ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவி, ரத்ததானம், மருத்துவமுகாம் நடத்த வேண்டுகோள்

சென்னை, பிப்.21–

ஜெயலலிதாவின் 73–வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் 24–ந் தேதி அன்று அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் அரும்பணியாற்றிய புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73–வது பிறந்த நாளான 24–ந் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவச் சிலைக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், ‘‘நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள புரட்சித் தலைவி அம்மாவின் 73-–வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை,

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்,

கழக உடன்பிறப்புகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும்’’ பெருந் திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள்

நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா தமது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்’’ என்றும்;

எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கழக கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றும், அம்மா நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தியதைப் போல், அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்;

ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; இலவச திருமணங்களை நடத்தி வைத்தல்; ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்தகவலை அண்ணா தி.மு.க.தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *