போஸ்டர் செய்தி

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை விவகாரம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை, பிப். 11–

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது. ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அப்போலோ தாக்கல் செய்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

அப்போலோ-வுக்கு அவகாசம்

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே ஆணையம் செல்கிறது என்றும், அப்போலோ-விற்கு அதன் கருத்துக்களை சொல்ல ஒவ்வொரு கட்டத்திலும் உரிய அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்தார். மேலும், ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்த பிறகு, அதில் உள்ள பரிந்துரைகளை பொறுத்து அப்போலோ வழக்கு தொடராலாம் என்றும், விசாரணையின் தொடக்க நிலையில் தொடரப்பட்ட வழக்கை அனுமதிக்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் விசாரிக்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அரசின் விளக்கத்தை அளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அனைத்து தரப்பு விளக்கத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், அவற்றை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தமிழக அரசு பதிகளிக்க உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 15ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *