செய்திகள் போஸ்டர் செய்தி

ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம்

Spread the love

போயஸ் கார்டனில் உள்ள

ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக்க

தமிழக அரசு அவசர சட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘‘ஜெயலலிதா அறக்கட்டளை’’ அமைப்பு

 

சென்னை, மே. 22–

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’’ அமைக்கப்படுகிறது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற கவர்னர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அவர் செய்த சாதனைகள்யும், தியாகங்களையும் தெரிந்து கொள்ள பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என, 17.8.2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, அந்த இல்லத்தைக் கையகப்படுத்த தமிழ் வளர்ச்சித்துறை 5.10.2017 அன்று நிர்வாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அந்த நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு 28.6.2019 அன்று வெளியிடப்பட்டது. இதன்பின், 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.

புத்தகங்கள், நகைகள்

‘வேதா நிலையம்’ இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த இல்லம் மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பர்.

இந்த அறக்கட்டளை ‘வேதா நிலையம்’ இல்லத்தைப் பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *