செய்திகள்

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் தலையிட்டதில்லை: சசிகலா விளக்கம்

எந்தவித விசாரணைக்கும் தயார்’

சென்னை, அக்.19-

‘‘ஜெயலலிதா மரணம் குறித்த எந்தவித விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்’’ என்றும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சசிகலா செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சசிகலா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியல் ஆக்குவதை பொதுமக்கள் யாருமே ஏற்க மாட்டார்கள். நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என் அக்கா (ஜெயலலிதா) என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என் மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையையும் தற்போது அரசியலாக்கி விட்டார்கள். தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை, எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஜெயலலிதா மரணத்தை பற்றி விசாரித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது.

ஜெயலலிதா மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஜெயலலிதா உடல்நல குறைவு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச்சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

என் மீது பழி

இந்த விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்துக்கோ உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாயாக இருந்து ஜெயலலிதாவை பாதுகாத்து வந்துள்ளேன். இந்தநிலையில் 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன?, இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

மருத்துவ சிகிச்சையில்

தலையிடவில்லை

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துகளை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த மருந்துகள் தர வேண்டும்? என்பதை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். இதுதொடர்பாக என்னிடம் எந்தவித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *