செய்திகள்

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்குவோம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரை

Spread the love

தேனி, ஜூன் 10–

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி பளியங்குடி (ராசிமலை) கிராமத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே குடியிருந்து வந்த பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் வரை தற்காலிகமாக குடியிருப்பதற்கு தலா ரூ.12 ஆயிரத்தினை வழங்கினார்.

பின்னர், வடவீரநாயக்கன்பட்டியில் ரூ.31.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 312 அடுக்குமாடி குடியிருப்பு கட்டட பணிகளையும், வடவீரநாயக்கன்பட்டி குறவர்கள் காலனியில் ரூ.16.63 கோடி மதிப்பீட்டில் 175 தனி வீடுகள் கட்டும் கட்டட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழாவில், துணை முதலமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது:–

புரட்சித்தலைவி அம்மா 2011–ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, தமிழக மக்களின் நலன் கருதி தமிழகத்தின் நிதி வருவாயினை மீண்டும் திட்டங்களின் வாயிலாக பொதுமக்களுக்கே திருப்பி அளித்திடும் வகையில், தொலைநோக்குப்பார்வையுடன் திட்டங்களின் பயன் நீண்ட காலத்திற்கு பயன் தரும் வகையில் ஏற்படுத்தி செயல்படுத்தினார்.

தமிழகத்தினை குடிசை இல்லாத தமிழகமாக மாற்றி 2023–க்குள் அனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டப்படும் என புரட்சித்தலைவி அம்மா அறிவித்தார்.அவரின் கனவை நிறைவேற்ற குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்குவோம்.

கணக்கெடுக்கப்பட்டதில் 11.50 லட்சம் வீடுகள் குடிசை வீடுகளாக கண்டறியப்பட்டு, தற்போது 6 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குள்

பணிகள் நிறைவு

தேனி மாவட்டத்தில் 4051 குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஒராண்டிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டின் மதிப்பானது ரூ.11 லட்சம் ஆகும். இதில் பயனாளிகளின் பங்காக ரூ.1.5 லட்சமும், மத்திய அரசின் பங்காக ரூ.1.5 லட்சமும், தமிழக அரசின் பங்காக ரூ.8 லட்சமும் வழங்கப்படுகிறது.

கட்டப்படவுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 400 சதுரடி பரப்பளவில் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இது தவிர இத்திட்டப்பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு, பேவர் பிளாக் நடைபாதை, ஆழ்துளை கிணறு போன்ற அடிப்படை வசதிகளுடன் திட்டப்பகுதியில் குடியிருப்புகள் கட்டப்படும். 12 மாதங்களுக்குள் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்யப்படவுள்ளது. மேலும், இத்திட்டப்பகுதியிலுள்ள பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் தேவையான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும்.

உதவித்தொகை

மேலும், நடப்பு நிதியாண்டில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சிக்காட்சி அம்மன் கோவில் மேடு பகுதியில் ரூ.47.99 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகளும், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி பளியங்குடி மலைவாழ் காலனி பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 35 வீடுகளும், தேனி ஊராட்சி ஒன்றியம் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் ரூ.31.17 கோடி மதிப்பீட்டில் 312 வீடுகளும்,

தேனி நகராட்சி குறவர்கள் காலனி பகுதியில் ரூ.16.63 கோடி மதிப்பீட்டில் 175 வீடுகளும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி என்ற அழகாபுரி பகுதியில் ரூ.43.13 கோடி மதிப்பீட்டில் 432 வீடுகளும், தேனி ஊராட்சி ஒன்றியம் தப்புக்குண்டு பகுதியில் ரூ.43.02 கோடி மதிப்பீட்டில் 431 வீடுகளும், கூடலூரில், தம்மனம்பட்டி பகுதியில் ரூ.23.98 கோடி மதிப்பீட்டில் 240 வீடுகளும்,

கூடலூர் மேகமலை டிரையல் காலனியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 60 வீடுகளும், போடிநாயக்கனூரில், பரமசிவன் கோவில் தெரு (வலசைத்துறை ரோடு) பகுதியில் ரூ.16.77 கோடி மதிப்பீட்டில் 168 வீடுகளும், முனிசிபல் காலனி பகுதியில் ரூ.31.68 கோடி மதிப்பீட்டில் 352 வீடுகளும், மீனாட்சிபுரம் பகுதியில் ரூ.23.99 கோடி மதிப்பீட்டில் 240 வீடுகளும் என மொத்தம் ரூ.287.86 கோடி மதிப்பீட்டில் 2,925 வீடுகள் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் தொடர்ச்சியாக ஏற்கனவே குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்குவதற்காக அரசின் சார்பில் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, வரும் நிதியாண்டில் போடிநாயக்கனூர், வடக்குமலை (பழங்குடியினர் காலனி) பகுதியில் 52 புதிய வீடுகளும், பரமசிவன் கோவில் தெரு (பகுதி-II) பகுதியில் 90 புதிய வீடுகளும், பொியகுளம் கொய்யாத்தோப்பு பகுதியில் 352 புதிய வீடுகளும், தேனியில் குறவர்கள் காலனி (பகுதி-II) பகுதியில் 120 வீடுகளும், தப்புக்குண்டு (பகுதி-II) பகுதியில் 512 புதிய வீடுகளும், என மொத்தம் 1126 புதிய திட்டப்பகுதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் கட்டப்படும்.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியில் நீர்நிலை புறம்புகல், சாலைகள் மற்றும் ரெயில்வே புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மாவட்ட நிர்வாகத்தால் கணக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசின் சார்பில் மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இவ்விழாவில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சக்திவேல், குடிசைப்பகுதி மாற்று வாரிய செயற்பொறியாளர் ஆர்.முனியசாமி, உதவி செயற்பொறியாளர் பி.நடராஜபாண்டி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பார்த்திபன், எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், உதவி பொறியாளர்கள் எம்.புஷ்பராசன், பி.சுதா, வட்டாட்சியர் எல்.ஆர். சுந்தர்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *