ஆர். முத்துக்குமார்
இந்தியாவின் மிக லாபகரமாகவும் நல்ல சேவை தருகிறார்கள் என மக்களால் அங்கீகாரம் பெற்ற ‘ஜெட் ஏர்வேஸ்’ 2019 ல் நிதி நெருக்கடிகள் காரணமாக சிறகு ஒடிந்த பறவையாய் தரை இறங்கிச் சேவைகளை நிறுத்தி விட்டது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நமது நாட்டின் 2 வது பெரிய விமான சேவை நிறுவனமாக கொடிக்கட்டி பறந்த முதல் தனியார் விமான சர்வீசாக இருந்தவர்கள் இப்படித் திண்டாடக் காரணம் இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.
சுமார் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. பல விமான நிலையங்களுக்கும் பாக்கி, டீசல் போட்டவர்களுக்கும் கொடுக்க முடியாத பரிதாபம்;, இதனைத் தொடர்ந்து அவர்கள் சேவைகளை நிறுத்தி விட்டு திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டனர்.
இந்நிலையில் 2021 ஜூலை மாதத்தில் ஜலான் கால்ராக் கூட்டணி ரூ.900 கோடி தந்து உயிர்ப்பிக்க உறுதி தந்தது.
ஊழியர்களுக்கு இறுதியாக முழுத் தொகையையும் தருவதாகவும் உடனடியாக விமான நிலையங்களின் பாக்கிகளை தரப் போகிறோம் எனவும் அறிவித்தனர்.
ஆனால் இதுவரை ரூ.150 கோடியை மட்டுமே தந்திருக்கிறார்கள். இது வங்கிகளுக்கு உத்தரவாத தொகை தான் ; விரைவில் பெருவாரியான தொகையை தருகிறோம் என தேசிய சட்ட தீர்ப்பாயம் உறுதி தந்துள்ளது. மேலும் திவால் அறிவிப்பை தள்ளிப் போடவும் கேட்டுக் கொண்டுள்ளது.
எங்கள் விமானங்களின் இயந்திரங்கள் பண்டைய தொழில்நுட்பங்கள் ஆகும்;அதைப் புதிதாக சரி செய்வதை விட அவற்றை விற்றுவிட்டு புதிதாக வாங்கினால் சேவைகளின் தரம் உயர்ந்து மீண்டும் லாபகரமாக இயங்க முடியும் என்று கூட்டணி கேட்டுள்ளது.
வர்த்தகமின்றி தரையிறங்கி பராமரிப்பு ஏதுமின்றி இருக்கும் விமானங்களை எப்படி நம்பி பாதுகாப்பு அனுமதிகள் வழங்கிட முடியும்? அதனால் புது விமானங்கள் வாங்குவதற்கு ஒப்புதலும் அனுமதியும் கேட்டு வருகிறார்கள்.
குறிப்பாக கொரோனா ஏற்படுத்திய முழு ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிப்படைந்த துறை சுற்றுலாத் துறையாகும்.
சகஜ நிலை மெல்ல திரும்ப ஆரம்பித்திருக்கும் நிலையில் ‘ஜெட் ஏர்வேஸ்’ புதிய தலைமையில் செயல்பட ஆரம்பித்தால் சிறப்புற செயல்பட முடியும்!
குறிப்பாக 250 ஊழியர்கள் 4 ஆண்டுகளாக சம்பளம் வாங்காது துலைத்துக் கொண்டிருப்பதையும் மனதில் கொண்டு தீர்ப்பு ஆணையம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பான அடுத்த விசாரணை டிசம்பர் 6 நடைபெற இருக்கிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிறுவனங்களின் நிதி தொல்லைகளை தீர்க்கவே தீர்ப்புகளை தந்து வருகிறது. அதில் பணியாற்றி ஊழியர்கள் நிதி ஆதாரமின்றி தவிப்பதையும் உணர்ந்து அவர்களுக்கும் சாதகமான தீர்ப்பை உடனே வெளியிட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற நல்ல தீர்ப்பு எதிர்பார்க்கிறது விமான சேவைத் துறை.