ஐதராபாத், ஏப். 14–
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அவர் மீது மலர்களை வீசுவது போல் மலர்களுடன் கற்களை வைத்து வீசியதால் ஜெகன்மோகன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கற்களை வீசிய மர்ம நபர்களை பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில் ஜெகன்மோகன் மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜெகன் மோகன் விரைந்து குணமடைந்து பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதான கல் வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என்றும் ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரிகத்தையும் பரஸ்பரம் மரியாதையையும் நிலை நாட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த ஜெகன்மோகன் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.