செய்திகள்

ஜெகன்மோகன் கட்சிக்கு கடும் பின்னடை: ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு

Makkal Kural Official

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் 133 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை

பிரதமர் மோடி வாழ்த்து

அமராவதி, ஜூன் 4–

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார்.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன. இம்முறை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது சொந்த தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளாவை காங்கிரஸ் களம் இறக்கியது. இவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கியதோடு, அக்கட்சி சார்பில் கடப்பா எம்.பி .தொகுதியிலும் அவர் போட்டியிட்டார்.

ரோஜா பின்னடைவு

காலை 9.30 நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தெலுங்கு தேசம் கூட்டணி 104 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை ஆந்திராவில் தெலுங்கு தேசம் 12 தொகுதிகளிலும் பாஜக 4 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன. சுற்றுலா துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பானுபிரகாஷ் சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா இந்துபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மங்களகிரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பிட்டாபுரம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். ஜெகன் கட்சியை சேர்ந்த பல அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் பின்னடவை சந்தித்து வருகின்றனர்.

இதேபோன்று தெலங்கானா மாநில மக்களவை தொகுதியில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இக்கட்சி மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், தற்போதையை எம்பியுமான அசதுத்தீன் ஓவைஸி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாதவி லதாவை விட பின்தங்கி உள்ளார். இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

133 இடங்களில்

முன்னிலை

பகல் 1.30 நிலவரப்படி தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி 157 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 9088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 34964 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் 40693 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

நகரி தொகுதியில் போட்டியிட்ட ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா இம்முறை பின்னடைவை சந்தித்து வருகிறார். ரோஜா 10376 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் பானு பிரகாஷ் 18388 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதேபோல், ஜெகன் கட்சியினருக்கு பல தொகுதிகளில் பின்னடைவே காணப்படுகிறது.

பிரதமர் மோடி

வாழ்த்து

தெலுங்கு தேசம் 133 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆந்திர மாநில முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்க உள்ளார் சந்திரபாபு நாயுடு. சந்திர பாபு நாயுடு வரும் ஜூன் 9 ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று கட்சி அறிவித்துள்ளது. பதவி ஏற்பு விழா அமராவதியில் நடைபெறவுள்ளது. மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலையில் வகித்து தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைப்பதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைமையகத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்கு சென்றபோது ஆளும் கட்சியினரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். இதையடுத்து முதல்வராகதான் இனி சட்டமன்றத்துக்குள் அடி எடுத்து வைப்பேன் என சவால் விட்டார். சொன்னப்படியே ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் 151 இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை 20 இடங்களில் மட்டுமே அக்கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி பெரும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளார்.

மக்களவை

தொகுதி நிலவரம்

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணியும், 5 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *