சிறுகதை

ஜூஸ் கார்னரில் பால் | ராஜா செல்லமுத்து

பிரதான சாலையிலிருந்து ஜூஸ் கடைக்கு ஆட்கள் எப்போதும் வந்தபடியே இருப்பார்கள். சின்னக் கடை தான் என்றாலும் கூட்டம் எப்போதும் நிறைந்தபடியே இருக்கும். இரண்டு பக்கமும் சேர்களைப் போட்டிருப்பார்கள், சேர்களைத் தாண்டியும் ஆட்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த டவுன்ல இப்பிடி ஒரு கடையா? நெனச்சுப் பாக்கவே ஒரு மாதிரியா இருக்கில்ல.

‘ஆமாங்க’

கருப்பட்டி, உளுந்தகளி, பருத்திப்பால் இப்பிடி கிராமத்து வாசனையை அப்பிடியே உருச்சு வச்சிருக்காங்கள்ல.

‘ஆமா’ பணம் மட்டும் சம்பாதிக்கிறது தான் இங்க இருக்கிறவங்களோட தலையாய நோக்கமா இருக்கு’

‘ஆனா, இந்த கட கொஞ்சம் வித்யாசம்ங்க’

‘ம்’

‘கெடைக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கிற சீக்கிரமே செய்ய கஷ்டப்படுற கருப்பட்டி, உளுந்து, சுண்டல்ன்னு ரொம்ப கொறச்ச வெலைக்கு குடுக்கிறாங்க.

‘இப்பிடி மனுசனும் இங்க இருக்கத் தான செய்றாங்க’

‘ம்’ என்ற ரவியும் காமராசும் பேசிக் கொண்டே இருந்தனர்.

‘பருத்தpப்பாலு தான கேட்டீங்க’

‘ஆமா’ என்ற இருவரின் கையிலும் சூடான பருத்திப்பால் வந்து சேர்ந்தது.

‘ஏங்க, இது உண்மையிலேயே பருத்திப் பாலா? என்ற ரவியின் கேள்விக்கு, ஜூஸ் கடைக்காரர், ‘இங்க இருக்கிற ஆளுகளுக்கு சந்தேகப் புத்தி ரொம்ப அதிகம்ங்க. நம்ப மாட்டாங்கன்னு தான், பருத்திக் கொட்டைய இங்கயே ஊற வச்சு ஆட்டி பால் எடுக்கிறோம்’ என்ற தனசேகர், கொத்தும் கொலையுமாக பருத்தி விதையை கையில் அள்ளிக் காண்பித்தார். பார்த்தீங்களா?’

‘ஆமாங்க உண்மை தான்’ என்று காமராசும் அதற்கு வழிமொழிந்தான்.

‘இதெல்லாம் உங்களுக்கு கட்டுபடியாகுதா?

‘ஓ… ஆகுதே!’

‘ரொம்ப பெரிய விசயம்ங்க’

இவ்வளவு கொறச்ச வெலையில உங்களுக்கு பொருள்கள குடுக்க முடியுது. ஆனா இங்க இருக்கிற ஆளும் பணம் மட்டும் தான் சம்பாரிக்கணும்ங்கிற குறிக்கோள்ல இருக்கானுக.

‘யு ஆர் வெரி கிரேட்’ என்று தனசேகரை வாழ்த்திய இருவரும் பருத்திப் பாலைப் பருகிக் கொண்டிருந்தார்கள்.

அங்கே, இன்னும் இன்னுமென கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.

சார் உங்களுக்கு?

‘ஆப்பிள் ஜூஸ்’

‘எனக்கு ஒரு உளுந்தங்களி’,

‘பருத்திப்பால்’ என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.

வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

‘தனசேகர் உட்பட அந்தக் கடையிலிருந்து அத்தனை ஊழியர்களும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்’

அப்போது ‘ஆ’வெனக் கத்தினாள் ஒரு பெண்.

‘என்ன என்ன’ என்று அங்கு கூடியிருந்த ஆட்கள் கேட்க’ அங்கே ஒரு பூனை ஓடிக் கொண்டிருந்தது.

அது ஒண்ணும் செய்யாதுங்க. நீங்க சாப்பிடுங்க என்றான். அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு வடநாட்டுப் பையன்.

அந்தப் பூனை வளைய வளைய அந்தக் கடையையே வலம் வந்து கொண்டிருந்தது.

‘என்னங்க இது போகாதா’

‘அப்பிடித்தான் போல’

ஜூஸ் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

‘இந்தா வாரேன்’ என்ற வடநாட்டுக்காரன் வெளியே சென்றான்.

‘மியாவ்…மியாவ்….. என்று கத்திய அந்தப் பூனை சுற்றுச் சுற்றி வட்டமடித்து விட்டு ஒரு சேரின் கீழே உட்கார்ந்தது.

சேரில் உட்கார்ந்திருந்த பெண்மணி ரொம்பவும் தக்கத்துடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒண்ணும் செய்யாது நீங்க சாப்பிடுங்க என்ற தனசேகர் மற்ற ஆட்களுக்கு ஜூஸ் கேட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘மியாவ்…மியாவ்….. என்று கத்திக் கொண்டேயிருந்தது.

‘வெளியே போன வடநாட்டுக்காரன்’ சின்னக் கப்பில் பாலுடன் வந்தான்.

‘சாப்பிடு…சாப்பிடு…’ என்று சேரின் கீழே படுத்திருந்த பூனைக்கு வைத்தான்.

‘மியாவ்…மியாவ்…..’ என்று கத்திக் கொண்டிருந்த அந்தப் பூனை. பட்டென எழுந்து அந்தப் பாலைக் குடிக்க ஆரம்பித்தது.

எனக்கு ஒரு மாதுளை ஜூஸ்

எனக்கு ஒரு தர்பூசணி,

‘பருத்திப்பால்’

‘கருப்பட்டிக் காபி’ என்ற ஆர்டர்கள் பறந்து கொண்டிருந்தன.

‘மியாவ்…மியாவ்… என்று சன்னக் குரலில் கத்தியபடியே பாலைக் குடித்துக் கொண்டிருந்தது பூனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *