செய்திகள் போஸ்டர் செய்தி

ஜூன் 1–ந்தேதி முதல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி

மீன் பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு

ஜூன் 1–ந்தேதி முதல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி

 

சென்னை, மே 26–

மீன்பிடி தடைக் காலத்தை இம்மாதம் 31-ம் தேதியுடன் நிறைவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஜூன் 1–ந்தேதி முதல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பகுதியை உள்ளடக்கியுள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலமாக மீன்வளத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து முன்கூட்டியே நிறைவு செய்ய அனுமதிக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக மீன்வளத்துறை கருத்துரு அனுப்பியது. இந்த கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு மீன்வள அமைச்சகம் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 31-ம் தேதியுடன் மீன்பிடி தடை காலத்தை நிறைவு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், ‘‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அந்தமான் நிக்கோபரை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15–ந்தேதி முதல் மே 31–ந்தேதி வரையும், லட்சத்தீவை உள்ளடக்கிய மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரையும் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிறது. இந்த உத்தரவு இந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் ஜூன் 1–ந்தேதி முதல் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *