செய்திகள்

ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, மார்ச் 26–

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று 26வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் கூறியதாவது:–கொரோனா தொற்று உலகை விட்டு இன்னும் நீங்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக அளவில் தொற்று அச்சம் இருக்கிறது. தென் கொரியா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இன்னும் லட்சக்கணக்கில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

தடுப்பூசி தான் தீர்வு

ஏற்கனவே கான்பூர் ஐ.ஐ.டி. மற்றும் பல மருத்துவ வல்லுனர்கள் சொல்லி இருக்கும் கருத்துப்படி, ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கொரோனா 4வது அலை தமிழகத்தில் வந்தாலும் அதனை தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது.

4வது அலை வரும் பட்சத்தில் அதில் இருந்து நாம் மீள்வதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால், 50 ஆயிரம் முகாம்கள் மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து 26வது வாரமாக தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் 3 கோடியே 90 லட்சத்து 41 ஆயிரத்து 963 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 50 லட்சத்து 61 ஆயிரத்து 287 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமலும், 1 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரத்து 690 நபர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பிற சேவைத்துறை அலுவலர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படுகிறது.

சென்னையில் 99% பேர்

முதல் தவணை செலுத்தி உள்ளனர்

12 முதல் 14 வயதுக்குட்பட்ட 10 லட்சத்து 91 ஆயிரத்து 841 (51.48%) சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் இதுவரை 28 லட்சத்து 58 ஆயிரத்து 680 (85.44%) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 20 லட்சத்து 37 ஆயிரத்து 866 (60.90%) நபர்களுக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 18 வயது கடந்த நபர்களில் 92.10% முதல் தவணை தடுப்பூசியும் 75.50% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் தடுப்பூசி செலுத்துவதில் மிக சிறப்பான முறையில் 99% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 81% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,585 ஊராட்சிகளில் நேற்று இரவு வரை 3,240 ஊராட்சிகளும், 121 நகராட்சிகளில் 27 நகராட்சிகள் 100% தடுப்பூசி செலுத்தியுள்ளன. மேலும் 5 மாவட்டங்கள் 100% மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளன. 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டங்கள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு முதல்வர் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் கூடுதலாக செலுத்தியதால் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் 100%க்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் வரை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 16 லட்சத்து 19 ஆயிரத்து 745 நபர்களில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 278 நபர்களுக்கு (45.08%) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும் அரசின் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ். மனீஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.