செய்திகள்

ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்தியா வெற்றி

ஆன்டிகுவா, பிப். 6–

ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 40 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் தாமஸ் மற்றும் ஜேக்கப் பீத்தல் வந்தனர். இந்த சீசனில் இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக இருந்த இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே பிரித்தார் இந்திய பவுலர் ரவிக்குமார். இரண்டே ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்துவந்த இங்கிலாந்து கேப்டன் டாம் பெர்ஸ்ட்டை அதே ரவிக்குமார் தனது இரண்டாவது ஓவரில் டக் அவுட் செய்தார்.

ரவிக்குமார் இங்கிலாந்தின் விக்கெட் சரிவை தொடங்கி வைத்தாலும், இந்தியாவின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ராஜ் பாவா அதை முழுவதுமாக பார்த்துக்கொண்டார். டாம் பெர்ஸ்ட்டுக்கு பிறகு வந்த அடுத்த மூன்று வீரர்களையும் (ஜேம்ஸ் ரெவ்வை தவிர) பத்து ரன்களுக்கு மேல் எடுக்கவிடாமல் அவுட் செய்தார். ஓப்பனிங் இறங்கி சிறிதுநேரம் நிலைத்திருந்த ஜார்ஜ் தாமஸையும் காலி செய்தார் ராஜ் பாவா. இதனால் 91 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

ஜேம்ஸ் ரெவ் மட்டும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய ஜேம்ஸ், போக போக அதிரடியாக விளையாடினார். இறுதியாக 95 ரன்கள் எடுத்திருந்த போது ரவிக்குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் ராஜ் பாவா கடைசி விக்கெட்டையும் எடுக்க, 45வது ஓவரில் இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

190 ரன் வெற்றி இலக்குடன்

190 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆங்கிரீஷ் ரகுவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்னூர் சிங் – ஷேக் ரஷீத் இணை மிக நிதானமாக விளையாடி, நல்ல அடித்தளத்தை அமைத்தது. ஹர்னூர் சிங் 21 ரன்களும், ஷேக் ரஷீத் அரைசதமும் அடித்தனர்.

கேப்டன் யஷ் துல் 17 ரன்களும், நிஷான் சிந்து ஆட்டமிழக்காமல் அரைசதமும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் ராஜ் பாவா 35 ரன்கள் எடுத்தார். குஷால் தம்பே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். தினேஷ் பானா ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜ் பாவா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதுக்கு இங்கிலாந்தின் டிவால் பிரெவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேப்டன் நெகிழ்ச்சி

இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் யஷ் துல், “இந்தியாவுக்கு இது பெருமித தருணம். ஆரம்பத்தில் ஒன்றிணைவதில் தடுமாற்றம் இருந்தது. ஆனால், கடைசியில் ஒரு குடும்பமாகவே மாறியது நம் அணி. எங்களுக்கு நிர்வாக ரீதியில் கிடைத்த உறுதுணைக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ரூ. 40 லட்சம் பரிசு

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவரும் தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர். மூத்த கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலமாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதே போன்று அணி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், துணை பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கோப்பையை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள்.

நாங்கள் அறிவித்துள்ள 40 லட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுச் சின்னம்தான்.., ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை..” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.