செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் கையும் காலும் தான் உதவி கொண்ட கடமை தான் நமக்கு பதவி
இந்தக் கொள்கைகளை பெரிதும் மதித்து நடப்பவன் இளைஞன் ரவீந்திரன். அவன் பி.எஸ்சி விவசாயம் படித்தான். விவசாயத்தில் நல்ல ஆர்வம். அவனுக்கு ஒரு சிறிய தோட்டம் வாங்கி பயிர்கள் வளர்க்க மிகவும் ஆசை.
ஆனால் அவனிடம் உள்ள பணத்தால் எந்த நிலமும் வாங்க முடியவில்லை. ஆனாலும் எப்படியும் வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
ஒருசிறிய தோட்டம் விலைக்கு வந்தது. அருகிலேயே சிறிய ஓடையும் இருந்தது. அதனால் நீர் பாசனத்திற்கு குறைவில்லை. விலையும் மலிவாக இருந்தது. ஆனாலும் ஒரு குறை என்னவென்றால் அதில் கருநாகம் நடமாடுவதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். அதனால் தான் அந்த மலிவு விலை.
ரவீந்திரன் தீவிரமாக யோசித்தான். இந்த இடமே நம்மால் வாங்க முடியும் என்று முடிவெடுத்தான்.
ஒரு நாள் ஒரு பழைய புத்தகம் ஒன்றை வாங்கினான். அதில் ஒருவர் நாகங்களைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தார். அதாவது கருநாகங்கள் சுமார் 90 ஆண்டு முதல் 100 ஆண்டுகள் வரை வாழும் தன்மை உடையவை. சுமார் 80 வயது முதல் அதன் வயிற்றில் உள்ள அமிலங்கள், திரவங்கள், விஷங்கள் அதன் எச்சில்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளிக்கற்களாக மாறும் தன்மை உடையவை. அதுதான் ‘ஜீவரத்தினம்’ என்பதாகும். பாம்பின் முடிவு காலம் நெருங்க நெருங்க அதன் சக்தி கூடும். சுமார் 90 வயதுக்கு மேல் திடீரென வாயில் வந்து அடையும். அந்த ஜீவரத்தினக் கற்கள் ஒரு நாள் வாயிலிருந்து வெளிவந்து விடும். உடனே அந்த கருநாகம் இறந்து விடும். அந்த ஜீவரத்தினம் விலை மதிப்பற்றது. அது யாரிடம் இருக்கிறதோ அந்த நபர் நினைத்தெல்லாம் நிறைவேறும். இதைப் படித்தான். இளைஞன் ரவீந்திரனுக்கு கருநாகத்தைப் பற்றிய பயம் ஒழிந்தது. தன்னுடைய நிலத்தைப் பற்றியே நினைத்தான். அறுவடையும் நன்றாக இருந்தது. நாகமும் அதன் புற்றில் மட்டுமே இருக்கும். ரவீந்திரனும் தொந்தரவு செய்வதில்லை.
ஒரு நாள் கருநாகமும் ஜீவரத்தினத்தை உமிழ்ந்தது. அந்த கருநாகத்தின் ஆயுளும் முடிந்தது. ரவீந்திரனும் பாம்பின் உடலை அப்புறப்படுத்தினான். கல்லை மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். ஒரு துணிப்பையில் சுற்றியபடி எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குகொண்டு போனான். அப்போது அவன் மனைவி ‘‘ மழை பெய்தால் வீடு மிகவும் ஒழுகுகிறது. நீ வேண்டுமானால் ஒரு நல்ல வீடு இருக்கிறது ; வாங்கிக் கொள் என்று ஒரு சொந்தக்காரர் சொன்னார்’’ என்றாள்
. ரவீந்திரனும் சரி என்றான். வீடு திடீரென அழகிய வீடு அமைந்து விட்டது. வீட்டுக்கு பெயர் ஜீவரத்தினம் என்றே வைத்தான்.
ஒரு நாள் மனைவி தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றாள்.
திடீரென எங்கே போவேன் பணத்திற்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான். எதிர்பாராத விதமாக திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. மகள் கேட்டாள். அப்பா நான் அவர் ஆபீஸ் போனவுடன் சும்மாவே உள்ளேன். எனக்கு ஏதாவது மருந்தகம் அமைத்துக் கொடுங்கள் என்றாள்.
சரி என்றான் ரவீந்திரன். ஆனால் ஒரு நிபந்தனை அதாவது பெயர் மட்டும் ‘ஜீவரத்தினம்’ என்று பெயரிட வேண்டும் என்றான்.
ரவீந்திரனுடைய ஒரே மகன் நித்திலன் தனக்கு ஏதாவது தொழில் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னான். சினிமா தியேட்டர் வேண்டும் என்றான். மகனை ஒரு சினிமா தியேட்டர் ஓனரிடம் வேலை பார்த்து பழகு என்றான்.
சரி என்று சொல்லி அந்த முதலாளியிடமே வேலைக்குச் சேர்ந்தான். தியேட்டர் நுட்பங்களை எல்லாம் கற்றுக் கைதேர்ந்து விட்டான்.
ரவீந்திரன் ஒரு பழைய தியேட்டரை வாங்கி, அதை இடித்து விட்டு புதிய, அதிநவீன தியேட்டராக மாற்றி நித்திலனிடம் கொடுத்தார்.
கண்டிப்பாக ‘ஜீவரத்தினம்’ என்றே பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அந்த தொழிலும் வெற்றிகரமாகவே நடந்தது. ஆனால் ரவீந்திரன் ஒரு முடிவெடித்தான். ஜீவரத்தினத்தின் மகிமை எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது. அவர்களுடைய சொந்த முயற்சியால் தான் முன்னேற வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தான்.
அதைச் செயல்படுத்தவும் செய்தான். ஜீவரத்தினத்தை துணியில் கட்டி ஒரு சிறிய குடத்தில் போட்டான். வீட்டின் பின்னால் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டான். அந்த ரகசியம் அவனுடன் புதைந்தது.
#சிறுகதை
ஜீவரத்தினம் கதை சூப்பர். மூடநம்பிக்கை எதிர்த்தது. கடைசியாக அவனுடைய முடிவு அருமையான ஒன்று. வாழ்க. வாழ்க