‘அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும்.
கரண் எவ்வளவோ சமாதானமாகப் போய்க் கொண்டு தான் இருந்தான். ஆனால்,அன்று அவனுக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாகவே வந்தது.
” என்ன மனிதர்கள் இவர்கள் . எல்லாம் கடவுளை கும்பிடுகிறேன்.கடவுளுடன் நேரடியா பேசுறேன் என்று கூட சொல்கிறார்கள். ஆனால் இரக்கம் கொஞ்சம் கூட இல்லையே? ஒரு சின்ன உயிர் வாழ்வதற்கு கூட சம்மதிக்காக இந்த மனிதர்களால் எப்படி இன்னொரு மனிதன் மீது இரக்கம் காட்ட முடியும்? கோயில்களுக்கும் சர்ச்சுக்கும் மசூதிக்கும் போய் மண்டிகிட்டு சாமி கும்பிடுவது எல்லாம் வேஷம் தானா ? இவர்களுக்குள் இரக்கம் என்ற வார்த்தையே வற்றிப் போய்விட்டதா ?”என்று பலவாறாகப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
“அதனால ஒன்னும் இல்லங்க. அவங்க செஞ்ச பாவம் அவங்களுக்கு கண்டிப்பா போய்ச் சேரும். நீங்க புலம்பி ஒன்னும் ஆகப் போறதில்ல. நடந்தது நடந்து போச்சு. இனி ஆக வேண்டியதப் பாருங்க ” என்று கரண் மனைவி தேவி கரணைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
இல்லம்மா. சாதாரணமா இருந்தா கூட பரவால்ல அது கர்ப்பிணியா இருக்கு. அதப் போய் இந்த மாதிரி அடிச்சிருக்காங்கன்றத நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அதுவும் ஒரு உயிர் தானே? அவங்களுக்கு ஏன் இது தெரியல” என்று கண்கள் கலங்கியபடியே பேசினான் கரண்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி அடிபட்ட அந்தப் பூனையைத் தூக்கி தன் மடியில் வைத்துத் தலை, உடம்பை லாகவமாக தடவி விட்டார்கள்.
இன்றாே நாளையோ அந்தப் பூனைக்கு பிரசவம் ஆகிவிடும் என்று அவர்களுக்கு தெரியும். இந்த நிலையில் அதை அடித்த மனிதர்கள் மீதுதான் கரண் கோபம் கொண்டிருந்தான்.
” சரி பூனைய விட்டுட்டு போங்க; நான் பாத்துக்குறேன்” என்று தேவி சொல்ல அடிபட்ட பூனையைக் கீழே இறக்கி விட்டு அலுவலகத்திற்குக் .கிளம்பினான் கரண்.
அந்த இரவு பூனை எங்கே போனது? என்று தெரியவில்லை. ஒருவேளை அடிக்கிப் பயந்து இந்த அடுக்கு மாடியை விட்டு ஓடி விட்டதா? இல்லை எங்காவது இறந்து விட்டதா? என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டார்கள் கரணும் தேவியும்.
அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகளைத் தைரியமாகவே திட்டினார்கள்
” நீங்க எல்லாம் மனுசங்க தானா? ஒரு உயிர் மேல இப்படி இவ்வளவு பெரிய வன்மமா? அந்த வாயில்லா ஜீவன அடிக்கிறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது? ” என்று கரண் கேட்டபோது
தம்பி ரொம்ப நல்லா பேசுறீங்க. அப்பார்ட்மெண்ட்ல பூனை எல்லாம் வளர்க்கக் கூடாதுன்னு தெரியும்ல்ல. அதுவும் நீங்க வாடகைக்கு தான் இருக்கீங்க. இந்தப் பூனை முடி உதிர்ந்து அது மனுஷன் சாப்பிடுற சாப்பாட்டில கலந்துததுன்னா என்ன நோய் வரும்னு உங்களுக்கு தெரியும் இல்ல? ” என்று மருத்துவ விஞ்ஞானம் பேசினார்கள் கரணைச் சுற்றியிருக்கும் சக குடியிருப்பு வாசிகள்
இனியும் இவர்களுடன் பேசிப் பயன் இல்லை என்பதை அறிந்து கொண்ட கரணும் தேவியும் பூனையைத் தேடிப் பார்த்தார்கள்; அது எங்கும் அகப்படவில்லை .
பின்னிரவைக கடந்த பொழுது வீட்டுக் கதவை யாராே தட்டும் சத்தம் கேட்டது.
“யார் இந்த நேரத்தில? ” என்று கதவை திறந்து பார்த்த கரணுக்கும் தேவிக்கும் கண்ணீரே வந்துவிட்டது.
” நன்றி என்றால் என்ன? என்பதை இந்த ஜீவன் கற்று வைத்திருக்கிறது என்பதை நினைத்த இருவரும் கீழே உட்கார்ந்தார்கள்.
அடிபட்ட அந்தத் தாய்ப் பூனை பிரசவமாகி இறந்து போன தன் இரண்டு குட்டிகளையும் தன் வாயில் கவ்விக் கொண்டு கரண் வீட்டு வாசலில் அமர்ந்து மியாவ்…. மியாவ்… என்று தன் மொழியில் கத்திக் கொண்டிருந்தது.
இதற்கு மேல் பேச முடியாத இருவரும் இறந்த குட்டிகளை எப்படி அடக்கம் செய்வது? என்று யோசனை செய்தார்கள்.
அடிபட்ட பூனையைத் தடவி கொடுத்தார்கள்.
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா இன்று வருத்தப்பட்டு கொண்டார்கள் கரணும் தேவியும்.இறந்த பூனைக் குட்டிகளை எடுத்துக் கொண்டு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு வெளியேறினார்கள்.
தன் குழந்தையை இழந்த சோகத்தில் மியாவ்… மியாவ்.. என்று கத்திக்கொண்டு தாய் பூனையும் அவர்கள் பின்னாலே ஓடி வந்தது
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலில் “ஜீவகாருண்யம் செய்தல் சிறப்பு ” என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த கரணும் தேவியும் அழுவதா ? சிரிப்பதா? என்று நினைத்துக் காெண்டே இறந்து போன பூனைக்குட்டிகளை எடுத்துக்கொண்டு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை கடந்தார்கள்.