சிறுகதை

ஜீன்ஸ் | ராஜா செல்லமுத்து

Spread the love

செல்விக்கு என்னாச்சு? ரெண்டு மூணு நாளா ஆளக்காணாம் .போன் கூட பண்ணலயே ”

‘‘ஏதோ உடம்புக்கு முடியலையாம்’’.

“நல்லா தானே இருந்தா”……

‘‘திடீர்ன்னு என்னவாம்” என்ற பாலு அன்று சேர்ந்த அழுக்குத் துணிகளை மொத்தமாக அள்ளிப் போட்டான்.

“ம்ம” இவ்வளவு துணியிருக்கு ரெண்டு மூணு நாளா சேந்த மொத்த துணியும் இப்ப குப்ப மாதிரி கெடக்கு. அவதான் வந்து துவைக்கணும் .இல்ல இன்னும் குப்ப மாதிரி அழுக்கு சேந்திட்டு தான் இருக்கும்” என்றான் நண்பன் நாகராஜ்.

அது ஒரு பேச்சிலர் அறை என்பதால் பார்க்கும் இடமெல்லாம் ஒரே குப்பையாகக் கிடந்தது.

“செல்வி வரலன்னா, துணி துவைக்க முடியாதே” இன்னைக்கும் அழுக்கு தான் போடனுமா?

என்று சலித்த பாலு, சுற்றிலும் பார்த்தான். வீட்டைச் சுற்றிலும் ஒரே அழுக்காக இருந்தது.

“செல்வி, என்னைக்கு வாராளோ அன்னைக்கு தான் துவைச்ச சட்ட பேண்டு போட முடியும் போல” என்று சலித்தவன் அன்றும் அழுக்கு பேண்ட் சட்டையையே போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான். அதைப் போட்ட போது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

ச்சே இது ஏற்கனவே போட்ட டிரஸ். வெயில்ல நனஞ்சு வேர்த்துப் போனது ஒரு மாதிரியா இருக்கே. இத போடுறதுக்கு ஒண்ணும் ஒப்பல என்று புலம்பிய பாலு அழுக்கை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

அன்று முழுவதும் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. புத்தியில் வந்து அந்த அழுக்குத் துணியை அப்பிக் கொண்டிருந்தது.

தன் செல்போனை எடுத்தான். செல்வியின் வீட்டிற்கு போன் செய்தான்.

“டிரிங்…. டிரிங்….”

“ஹலோ, நான் பாலு பேசுறேன்’’

“சொல்லுங்க சார்”

“செல்விக்கு என்னாச்சு? ரெண்டு மூணு நாளா ஆளக் காணாமே”

“தம்பி செல்விக்கு காய்ச்சல்ப்பா” உடம்பெல்லாம் அசதியா இருக்கேன்னு சொல்றா. அவளால எழுந்து உட்கார முடியலப்பா. இன்னும் ரெண்டு நாளைக்கு பொறுத்துகிற முடியுமா? என்று கொஞ்சும் குரலில் பேசினாள், செல்வியின் அம்மா.

“சரிம்மா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனீங்களா?

“இல்லப்பா”

“ஏன்?”

“செல்போன் இருந்தும் அதுக்கு காசு போட்டுப் பேச முடியாத நிலைப்பா யோவிச்சுக்கிறாத” என்று செல்வி அம்மா பாவக்குரலில் பேசியது பாலுவை என்னவோ செய்தது.

“நான் வீட்டுக்கு வரவா? ”

“உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமும்.. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கடன் கேட்டுருக்கேன். இன்னைக்கு ஆசுபத்திரிக்கு போயிருவோம் என்று செல்வி அம்மா சொன்னதைக் காதில் வாங்கிய பாலு செல்வியின் வீட்டிற்கு உடனே கிளம்பினான்.

“ச்சே …. பாவம், என்ன உலகம் இது. ஒரு சாரல் உயர்ந்து இருக்காங்க. இன்னொரு பக்கம் தாழ்ந்து கெடக்காங்க. இது சமநிலையாக வேற வழியே இல்லையா? என்ற பாலு கொஞ்சம் கோபத்துடனே செல்வி வீட்டிற்குச் சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் செல்வியின் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான்.

அழுக்குத் துணியோடு அழுக்குத் துணியாய் அப்படியே கிடந்தாள் செல்வி.

பாலு வருவதைப் பார்த்து செல்வியின் அம்மா, வாசலுக்கு ஓடி வந்தாள்.

“சார், நீங்க ஏன் இவ்வளவு தூரம் வந்து இங்க? வாங்க வாங்க’’ என வீட்டிற்குள் வரவேற்றாள்.

அந்தச் சின்ன வீட்டில், பாலுவை உட்காரச் சொல்வதற்கும் உட்காருவதற்கும் அங்கு இடமே இல்லை.

“சார் உட்காருங்க” என்று உதடுகள் சொன்னாலும் உட்காருவதற்கு செல்வியின் வீட்டில் நாற்காலியோ மேஜையோ எதுவும் இல்லாமல் இருந்தது.

“பரவாயில்ல இருக்கட்டும்” என்று பாலு அங்கு நின்று கொண்டே இருந்தான். துணிகளோ துணியாய்த் துவண்டு கிடந்தாள் செல்வி.

“செல்வி, செல்வி….. பாலு சார் வந்திருக்காரு பாரு என்று அம்மா எழுப்பியதும் மெல்ல எழும்பினாள் செல்வி பாலு சார், வாங்க… வாங்க…. சாரி சார் என்னால வர முடியல துணியெல்லாம் துவைச்சீங்களா சார் .’’

முடியல சாரி. உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது. காய்ச்சலா வேற இருக்கு .வயசான அம்மா நான் வேலைக்கு போனா தான சாப்பிட முடியும். பாவம் சார் அம்மா. சரியா கூட அவங்களுக்கு கண்ணு தெரியாது.

“நாளைக்கு, நாளை மறுநாள் கண்டிப்பா வரேன் சார். வந்து துவைச்சுப் போடுறேன் என்று வலியோடு பேசினாள் செல்வி.

தன் பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து “ஊசி போடுங்க” என்று சொல்லி வெளியே வந்தவனை,

‘‘சார், உடம்புக்கு வேற எதும் பிரச்சனை இல்லை சார் . உங்களோட நாகராஜ் சாரோட ஜீன்ஸ் பேன்ட்ட தூக்கித் தூக்கித் துவைக்கிறனா…. அதான் முடியல. உடம்பெல்லாம் வலிக்குது சார் .

ரெண்டு நாளைக்கு அப்படித் தான் இருக்கும். அப்புறம் சரியா போகும்.

நீ ஒண்ணும் வருத்தப்படாதீங்க . நாளைக்கு இல்ல, நாளை மறு நாள் வந்து தொவச்சு போடுறேன் என்று சொல்லிக் கொண்டே பாலுவின் ஜீன்ஸ் பேண்ட்டை பார்த்தாள் செல்வி.

பாலுவுக்கு என்னவோ போலானது. வீட்டிற்கு வந்தவன் மொத்த ஜீன்சையும் அள்ளி ட்ரை கிளீனர்ஸிடம் கொடுத்தான்.

ச்சே இனிமே இந்தச் சின்ன பொண்ண ஜீன்ஸ் பேன்ட்டுக்கள துவைக்க வைக்கக் கூடாது என்றவன் மனம் செல்வியின் வலியை உணர்ந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *