சிறுகதை

ஜீனியஸ் – ராஜா செல்லமுத்து

தேவி ஸ்வீட் கடை திறந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. ஆனால் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இனிப்பு வகைகளும் கார வகைகளும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும் விற்பனை ரொம்பவே டல் அடிக்கத்தான் செய்தது.

தயார் செய்யும் இனிப்பு வகைகள் கார வகைகள் ருசி நாக்கில் நடனம் ஆட வைக்கும். ருசியாக இருந்தாலும் வாங்குபவர்களின் வரத்து மட்டும் குறைவாக இருந்தது.

தினமும் வேலை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுப்பதற்கு கூட அந்த இனிப்பகம் சரியாக விற்பனையாகவில்லை.

அதனால் அதன் முதலாளி கோதண்டராமன் ரொம்பவே யோசித்தார் .இந்த இனிப்பு கடையை இழுத்து மூடி விடலாமா? என்று ஒரு இரவு இரண்டு இரவு அல்ல பல இரவுகள் தூங்காமல் யோசித்து யோசித்து மூடி விடலாம் என்று ஒரு முடிவுக்கே வந்தார் . ஆனால் கோதண்டராமனின் மகள் நந்தினி தன் அம்மாவின் பேரில் இருக்கும் அந்த இனிப்புக் கடையை மூடக்கூடாது என்று வாதம் செய்தாள்.

என்ன நந்தினி. இவ்வளவு செலவு பண்ணி தினமும் நஷ்டத்தில் தான் இந்த கடையை ஓட்டணுமா ? முடியாது. இத மூடி தான் ஆகணும் என்று கோதண்டராமன் கொஞ்சம் உரக்கவே பேசினார்.

அப்பா ஒரு கடைய மூடுவது ரொம்ப சுலபம். ஆனா திறக்கிறது ரொம்ப கஷ்டம்பா. கொஞ்சம் யோசிங்க. எதுக்காக நமக்கு வியாபாரம் இல்ல. என்ன காரணத்துக்காக வாடிக்கையாளர்களை நம்மை ஏற்க முடியல. என்ன செஞ்சா வியாபாரம் நடக்கும். எப்படி நம்ம கடையில வியாபாரத்தை பெருக்குவது ? இப்படி எதையாவது யோசிச்சு பார்த்து இருக்கீங்களா? இல்ல அந்த யோசனை சொல்ற ஆளு யாராவது உங்க கூட இருக்காங்களா? என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள் நந்தினி.

மகள் கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் சொல்ல முடியாமல் விழித்தார் கோதண்டராமன்.

என்னப்பா நான் சொல்றது உங்களுக்கு கேக்குதா? இல்லையா? என்று மறுபடியும் தன் தகப்பன் மீது கேள்வி கணைகளைத் தொடுத்தாள் நந்தினி.

அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

அப்பா நீங்க வச்சிருக்கிற கடைக்கும் மக்கள் நடமாடுற எடத்துக்கும் ரொம்ப தூரம் இருக்கு. அதனால மக்கள் வந்து எட்டி வந்து நம்ம கடையில பொருளை வாங்குவதற்கு யோசிக்கிறாங்க. எப்பவுமே பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூடுற இடம் சாலைகள் இணைப்பு இடம். இல்ல மக்கள் அதிகமா செல்லக்கூடிய தியேட்டர். கேலிக்கை விடுதி. இப்படி எத்தனை இருக்கோ அது பக்கத்துல தான் எந்த வியாபார ஸ்தலமும் இருக்கணும். அப்பதான் பொட்டிக்கடையோ துணிக்கடையோ, தங்கக்கடையோ எதா இருந்தாலும் ஓடும்.

அத விட்டுட்டு நீங்க மக்கள் நடமாட்டம் இல்லாம இருக்கிற இடத்தில கடைய வச்சிட்டு எனக்கு வியாபாரம் வரலைன்னு சொன்னா அது தப்பு என்றாள் நந்தினி.

சொல்றது சரிமா. இப்ப என்ன பண்ணலாம்னு நீயே முடிவு பண்ணு என்று மகளின் பேச்சுக்கே விட்டுவிட்டார் அப்பா.

நம்ம கடைக்கும் பஸ் நிக்கிற இடத்துக்கும் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டாள் நந்தினி

உனக்கு தெரியாதாம்மா என்கிட்ட கேக்குற? என்று கொஞ்சம் சிரிப்பு கலந்த குரலிலே பேசினார் கோதண்டராமன்.

அப்பா எனக்கு தெரியும். நீங்க எவ்வளவு தூரம் இருக்குன்னு நினைக்கிறீங்க என்றாள்.

ஒரு அரை கிலோ மீட்டருக்குள்ள இருக்கும் என்று அந்த பேருந்து நிலையத்தை சுட்டிக் காட்டினார் கோதண்டராமன் .

அந்த பஸ் ஸ்டாப் நம்ம கடைக்கு கிட்ட கொண்டு வரணும். அதுக்கு ஒரு யோசனை செய்யுங்க. அப்படி பஸ் ஸ்டாப் நம்ம கடை பக்கத்துல வந்துச்சுன்னா பஸ் ஏறுறவங்க இறங்குறவங்க எல்லாம் நம்ம கடையை பார்க்காம போக மாட்டாங்க. கடைக்குள்ள நுழையும் போது ஏதாவது வாங்கிட்டு தான் போகணும். அப்படிங்கற உணர்வு அவங்களுக்கு ஏற்படும். அப்போ நம்ம வியாபாரம் விருத்தி அடையும் பொருட்களையும் நம்ம அதிகமா உற்பத்தி பண்ணுவோம். வேலை செய்ற ஆளுகளுக்கும் சம்பளம் கிடைக்கும். இதுதான் நம்ம ஐடியா என்றாள் நந்தினி

அது சரிமா. அரசாங்க பஸ் ஸ்டாப் எப்படி நாம மாத்தி கொண்டு வர முடியும் என்று கேட்டார் கோதண்டராமன்.

இதுக்கு எல்லாம் ஒரு டிரிக் இருக்குப்பா. எங்க எப்படி பண்ணனுமோ ?அதை செஞ்சமுனா அழகா பஸ் ஸ்டாப் நம்ம கடைக்கிட்ட கொண்டு வந்துட முடியும் என்றாள் நந்தினி .

இது முடியுமா ?அரசாங்க பொறுப்பில இருக்கிற எடத்த எப்படி பண்ணுவ ?என்று கோதண்டராமன் சோகத்தோடு கேட்டார்.

எல்லாம் முடியும்பா நான் பாத்துக்குறேன் என்றாள் நந்தினி மறுநாள் காலையிலிருந்து தன்னுடைய இனிப்பு கடைக்கும் பேருந்து நிலையம் இருக்கும் இடத்திற்கும் 10, 15 முறை நடந்திருப்பாள். அவள் கண்ட ஒரு விஷயம் எப்படியும் பேருந்து நிலையத்தை தன் கடைக்கு அருகில் மாத்தி விடலாம் என்று நினைத்தாள்.

நந்தினி சொன்னது போலவே ஒரு மாதத்திற்குள்ளாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த பேருந்து நிலையம் இப்போது தேவி இனிப்பு கடை அருகில் வந்தது. கோதண்டராமனுக்கு ஒன்று விளங்கவில்லை

தன் மகளை உச்சி மோந்து பாராட்டினார் .அவள் சொன்னது போலவே இப்போதெல்லாம் பேருந்தில் ஏறுபவர்கள் இறங்குபவர்கள் என்று எல்லோரும் தேவி இனிப்பு கடைக்குள் நுழைந்து இனிப்பு காரங்களை வாங்கித்தான் போனார்கள் . மூடி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த கோதண்டராமனுக்கு கழுத்திற்கு மேல் வியாபாரம் வந்தது தலைக்கு மேலே பணம் குவிந்தது .

அவருக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு ஆண்டுகள் வியாபார ஸ்தலத்திலிருந்தும் இது மாதிரியான ஒரு சிந்தனை நமக்கு வரவில்லையே? எப்படி என்று குழம்பிப் போய் தன் மகள் நந்தினிடம் கேட்டார் .

அப்பா ரொம்ப சிம்பிள். எப்பவுமே நம்ம பண்ற விஷயம் சரியா இருக்கணும். அப்படிச் சரியா இருந்தா அரசாங்கம் இல்ல . எத வேணாலும் நம்ம கட்டுப்படுத்த முடியும் என்று கொஞ்சம் தெனாவட்டாகவே பேசினாள்

நந்தினி அப்படி என்னம்மா சொன்ன ? நீ சொல்லு அதைக் கேட்க எனக்கு ஆவலா இருக்கு என்றார் கோதண்டராமன்.

அது ஒன்னும் இல்லப்பா. அரை கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கிற பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு பெரிய ஸ்கூல் இருந்தது. அந்த ஸ்கூல நான் பார்த்தேன். அங்க தான் என்னுடைய புத்தி வேலை செஞ்சது.

வெரி சிம்பிள் அந்த ஸ்கூலுக்கு குழந்தைங்க வாரறது. ஸ்கூல் முடிஞ்சு போறது. இதெல்லாம் நோட் பண்ணுனேன்.

அப்போ பஸ்ல இருந்து வர்றவங்க போறவங்க இறங்குறது, போறது பஸ் நிக்கறது எல்லாமே அந்த குழந்தைகளுக்கு ரொம்ப தொந்தரவா இருக்குன்னு நான் பார்த்தேன்.

இத வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறைக்கு அனுப்பி வச்சேன்.

இந்த பஸ் ஸ்டாண்ட் இருக்கிறதுனால பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும். அதனால இந்த பஸ் ஸ்டாண்ட் நீங்க கொஞ்சம் முன்னாடி தள்ளி வச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் சார். என் குழந்தையும் அங்கதான் படிச்சிட்டு இருக்காங்க. என்னோட குழந்த ஒரு நாள் பஸ்ல சிக்கி உயிர் போகத் தெரிஞ்சுச்சு. எனக்கு பயமா இருக்கு .

இந்த பஸ் ஸ்டாண்ட் கொஞ்சம் முன்னாடி மாத்தி வச்சா என்னாேட குழந்தைக்கு மட்டும் இல்ல. அங்க படிக்கிற எத்தனையோ குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்கும் அப்படின்னு ஒரு லெட்டர் போட்டேன்.

அந்தப் போக்குவரத்து துறை உயர் அதிகாரியும்

அம்மா நீங்க சொல்றது ராெம்ப கரெக்ட். நாங்க அத உடனே மாத்திரோம் . அப்படின்னு மாத்தி கொடுத்துட்டாருப்பா. இதுதான் நான் எடுத்த முடிவு. இன்னைக்கு பாருங்க. நம்ம கடை பக்கத்திலேயே பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சு வியாபாரம் ஜோரா நடக்கும் போங்கப்பா.

மூளைய அப்படியே வச்சுக்கிட்டு இருந்தா மழுங்கி போயி, அது சிந்திக்க முடியாத ஒரு பொருளாகிரும். எதையாவது யோசிக்கணும். என்ன செய்ய முடியும்னு பாக்கணும். நான் செஞ்சிட்டேன் . உங்க புள்ளப்பா.

நீங்க அதுக்கு தகுந்த மாதிரி ஆட்களை வேலைக்கு வைக்கணும் அப்பத்தான் வியாபாரத்தை விருத்தி படுத்த முடியும். மத்தவங்களுக்கு நாம உதவியா இருக்க முடியும் என்று சொன்னாள் நந்தினி.

இது தப்பில்லையாம்மா மத்தவங்கள ஏமாத்திரமே என்றார் கோதண்டராமன் .

அப்பா நான் பண்ணதுலயும் ஒரு நல்லது தான் நடந்திருக்கு உண்மையிலேயே அந்த ஸ்கூல்கிட்ட அந்த பஸ் ஸ்டாப் இருந்ததுனால அங்க படிக்கிற குழந்தைகளுக்கு நிறைய இடைஞ்சல் தான் இருந்தது. அது உண்மைதான்.

அது மட்டும் இல்லாம நம்ம கடையில வேலை பார்க்கிற நூத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நம்ம ஒருத்தனால வேலை கொடுக்க முடியுது .அவங்க குடும்பம் நல்லபடியா வாழ்ந்திட்டு இருக்காங்கன்னா அது இந்த தேவி இனிப்பு கடையினால் தான் பா.

இங்க இருக்குற பஸ் ஸ்டாண்ட் அங்க இருந்தா என்ன? இங்க இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதானே. இதுனால யாருக்கும் நஷ்டம் இல்லையே .இரண்டு பக்கமும் வாழ்க்கை தானே இருக்கு .நல்லது தானே நடந்திருக்கு என்று சொன்னாள் நந்தினி.

மகளின் கூரிய அறிவைக் கண்டு அவளை உச்சி மோந்தார் கோதண்டராமன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *