ஆர். முத்துக்குமார்
சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு ஜி20 கல்வி மாநாடு நடந்தது அல்லவா? இது சென்னை மற்றும் தமிழகத்தின் சுற்றுலா துறைக்கு சத்து ஊசியாகத்தான் இருக்கிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஜி20 மாநாடுகளின் கல்வியாளர்கள் நிபுணத்துவம் பொருந்திய பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள்.
வந்த அறிஞர்கள் ஐஐடி சென்னை வளாகத்தின் இயற்கை எழில், அங்குள்ள தங்கு வசதிகள், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் புதுமை படைப்புகளை சந்தைப்படுத்தும் வசதிகளை பார்த்து வியந்துள்ளனர். அது மட்டுமின்றி அந்த சூழலில் இருந்தவர்கள் இன்றி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் ரசித்து மகிழ்ந்துள்ளனர்.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மகாபலிபுர அழகையும், பண்டைக்கால தமிழர்களின் கை வண்ணத்தையும் நேரில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
3 அமர்வுகளில் உயர்தர படிப்புகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முதல் அமர்வில், யுனிசெப், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் பிரதிநிதிகள், 2ம் அமர்வில் மொரீஷியஸ், துருக்கி, இங்கிலாந்து, இந்தியப் பிரதிநிதிகள், 3ம் அமர்வில் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கு முந்தைய நாள் புதுக்சேரியில் ஜி20 பிரதிநிதிகள் சமுதாய வளர்ச்சிப் பற்றிய மாநாட்டில் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
அதில் பேசியவர்கள் அடிகோடிட்டு காட்டிய முக்கியம்சங்களில் ஒன்று ஏழ்மையை எப்படி நீக்குவது என்பதை தான்.
விஞ்ஞானம் வளரவளர ஏழ்மை நம்மை விட்டு விலகுவதாகவும் ஒருவர் எடுத்துக் கூற, அனைவரின் பாராட்டுக்களை கரசோகமாக பெற்றார்.
அங்கு பங்கேற்க வந்த பல அறிஞர்களும் புதுச்சேரியின் பல்வேறு அம்சங்களை நேரில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
ஆக இப்போது புரிகிறதா ஜி20 மாநாடு நமக்கு தர இருக்கும் மதிப்பூட்டல் என்ன என்பது? கிட்டத்தட்ட 200அமர்வுகள் நாடெங்கும் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க பலத்தரப்பட்ட நிபுணர்கள் ஜி20 என்ற பணக்கார நாடுகளின் கூட்டமைப்பின் அங்கத்து நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்களில் பலர் தனியாக வரவில்லை, முதலீட்டாளர்கள், பங்கேற்க வந்துள்ள நமது நாட்டின் சிறப்புக்களை காண ஆர்வத்துடன் வந்தவர்கள் என பெரும் படையே வந்துள்ளது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவில் மிகவும் பாதிப்படைந்தது சுற்றுலா துறையாகும். கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கூட பல அமர்வுகள் ஆன்லைன் வழியாகத்தான் இருந்தது.
ஆனால் நம் மண்ணில் நடைபெற துவங்கி விட்ட ஜி20 மாநாட்டில் எல்லாமே நேரடி பங்கேற்பு என்பதால் நட்சத்திர ஓட்டல்களில் ‘ஹவுஸ்புல்’ அறிவிப்பு வந்து விட்டது.
ஜி20 மாநாடு நமது அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், வெளியுறவு கொள்கைகள் போன்ற பல அம்சங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் நமது கலாச்சார மேன்மை, சுற்றுலா வசதிகள் போன்றவ்றை புதிய கோணத்தில் கண்டு ரசித்து சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தர இருக்கிறது.