ஆர். முத்துக்குமார்
பெரிய பதவிகள் தேடி வந்தால் கூடவே பொறுப்பும் வந்து விடுவதை நாம் மறந்து விடக்கூடாது! அதை கடமைக்கு என்று இல்லாமல், கவனத்துடன் செய்து வரும் நமது பிரதமர் மோடியை பாராட்டியே ஆகவேண்டும்.
உலக அமைப்புகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருந்தும் நமது குரலுக்கு பெரிய மதிப்பை எதிர்பார்க்க முடியாது என்று இருந்த நிலை மாறி, நமது எண்ணங்கள் என்ன? என பல்வேறு பிரச்சினைகளுக்கு வளரும் பொருளாதாரங்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பிரிக்ஸ் அமைப்பில் நமது பங்களிப்பாகும். ஒரு பக்கம் ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு, தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதி வரை உலக பணக்கார நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி–20 அமைப்பின் தலைமையில் நாம்!ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதையொட்டி நாடு முழுவதும் 56 நகரங்களில் 200 மாநாடுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில்,ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.
இத்தருணத்தில் பிரதமர் மோடி எழுதியுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, ‘உக்ரைன் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மோடி, சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ‘இது போர்க்கான காலம் கிடையாது’ என கூறியதையும் நினைவுபடுத்தி உள்ளார்.
பல்வேறு சவால்களை உலகம் எதிர்கொண்டிருக்கிறது. ஜி-20அமைப்பின் ஓராண்டு கால தலைமையில் மனித குலம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜி-20 தொடர்பான மாநாடுகள் தலைநகர் டெல்லி மட்டுமன்றி நாடு முழுவதும் நடத்தப்படும். 56 நகரங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடத்தப்படும். ஜி-20 மாநாடுகளை நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடுகளை மாநிலங்களில் நடத்துவது முதல் மற்ற என்னவெல்லாம் ஆலோசிக்கலாம் என்பன பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்ய முதல்வர் ஸ்டாலினையும் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர், அதற்காகவே ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளார்.