செய்திகள்

ஜி.கே.வாசன் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

Spread the love

சென்னை, ஜூன்.27-

ஜி.கே.மூப்பனாரின் மனைவியும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி அம்மாள் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் இல்லத்தில் கஸ்தூரி அம்மாள் வசித்து வந்தார். அவருக்கு வயது 87. உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஆழ்ந்த இரங்கல்

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது–

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மறைந்த ஜி.கே. மூப்பனாரின் மனைவியுமான கஸ்தூரி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் ஜி.கே.வாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அண்ணா தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறைந்த ஜி.கே.மூப்பனாருக்கு உற்ற துணையாகவும், ஜி.கே.வாசனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தாயாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கி வந்த கஸ்தூரி அம்மாளுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

கஸ்தூரி அம்மாள் மறைவுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறுதிசடங்கு

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு கஸ்தூரி அம்மாளின் உடல் சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள இல்லத்துக்கு நேற்று மாலை எடுத்து செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு இன்று மாலை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *