தலையங்கம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி (GST) வரி மூலம் சாதாரண மனிதனின் சுமை குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், “சாதாரண மக்களுக்கு ஜி.எஸ்.டி சுமையல்ல” என்றார். மேலும் முந்தைய வரி முறையில் மாநில அரசுகள் வரி வசூல் விவரங்களை வெளிப்படையாகக் கூறாததால் அது சுமையற்றதாகத் தோன்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
நிதி மந்திரி, “60% பொருட்களுக்கு வெறும் 5% மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது, மேலும் 28% ஜி.எஸ்.டி விதிப்புக்குள்ளானவை வெறும் 3% பொருட்களே” என்று தெரிவித்தார்.
ஆனால் ஜி.எஸ்.டி காரணமாக தனது தொழில்கள் நலிவடைந்துள்ளதாக திருப்பூர் சிறு ஆடை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர். ஜி.எஸ்.டி விதிப்பு குறித்தும் ஒவ்வொரு உற்பத்திச் சங்கிலியிலும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய அவல நிலை காரணமாக, பணச் சுழற்சி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“பெரு நிறுவனங்களுக்கு பொருட்களை எளிதில் வாங்கி பனியன்களை விற்பனை செய்ய முடியும்போது, நாங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியதால் எங்கள் பொருட்கள் அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது,” என்கிறார்கள் திருப்பூர் தொழிலதிபர்கள்.
மறைமுக வரிகள் பிற்போக்கு நடைமுறையைக் கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். “நேரடி வரி முற்போக்கு முறை. ஒருவர் சம்பாதிக்கும் அளவிற்கேற்ப வரி செலுத்துவதே நேரடி வரியின் சிறப்பு,” எனவும் மறைமுக வரிகள் அனைவரிடமும் விதிக்கப்படுவதால் சமூகத்தில் ஏழை, பணக்காரர் என வேறுபாடின்றி அனைவரும் சுமையை ஏற்க வேண்டி இருக்கிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஜி.எஸ்.டி அமலாகி ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை அதை எளிமையாக்க முடியாமை முக்கிய கேள்வியாக இருக்கிறது. மாநில வாரியாகவும் பொருட்கள் வாரியாகவும் ஜி.எஸ்.டி தரவுகள் வெளிப்படையாகக் கிடைக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் கோரிக்கையாகும்.