சென்னை, ஜன.24-–
‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளில் துல்லியமான நேரத்திற்கு உள்நாட்டிலேயே குறிப்பாக ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்ட ‘ரூபிடியம்’ அணு கடிகாரமும் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சில நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.
இஸ்ரோ வழி செலுத்தல் பணிக்காக புவி ஒத்திசைவான சுற்றுப்பாதையில் 3 செயற்கைக்கோள்களையும், புவிநிலை சுற்றுப்பாதையில் 4 செயற்கைக்கோள்களையும் கொண்டுள்ளது. 3 செயற்கைக்கோள்கள் தோல்வியடைந்துள்ளன. அதனால் தான் இஸ்ரோ பழைய செயற்கைக்கோள்களை புதிய தலைமுறை செயற்கைக்கோள்களாக மாற்றுகிறது.
எனவே 2-–ம் தலைமுறை வழிகாட்டும் செயற்கைக்கோள்கள் என்று இவை அழைக்கப்படுகிறது. தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள், அமெரிக்க ‘ஜி.பி.எஸ்’., ஐரோப்பிய ‘கலீலியோ’ அல்லது ரஷிய ‘குளோனாஸ்’ செயற்கைக்கோள்கள் போலவே விண்ணில் நிலைநிறுத்தப்படும். அத்துடன் அவற்றைப்போலவே வழிசெலுத்தல் மற்றும் நேரம் சேவைகளையும் கூடுதலாக வழங்குகிறது.
அதன் தற்போதைய வடிவத்தில் நேவிக் இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தகவல்கள் துல்லியமாகவும், கூர்மையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பிடத்தை கண்டுபிடிக்க இது குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்ளும். மேலும் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்பதை உங்கள் ஸ்மார்ட்போன் விரைவாக கண்டுபிடிக்கும் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு உதவும். ஏற்கனவே என்.வி.எஸ்-01 செயற்கைக்கோள் கடந்த 2023-ம் ஆண்டு மே-29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதேபோல் இந்த செயற்கைக்கோளும் வெற்றிகரமாக திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
#ISRO #GSLV–F15 #rocketlaunch #India #Tamilnews #Makkalkural