செய்திகள்

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல்: கவுன்சில் கூட்டத்தில் நாளை முடிவு

டெல்லி, செப். 16–

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் கொண்டு வருவது தொடர்பாக நாளை நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்கீழ் தற்போது 5, 12, 18, 28 என நான்கு அடுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், சில பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகிய ஐந்து பொருட்களும் அடங்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய அரசின் கலால் வரியும், மாநில அரசுகளின் மதிப்புகூட்டிய வரியும்தான் பெட்ரோல் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நீதிமன்றம் உத்தரவு

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சரக்கு, சேவை வரிவிதிப்பின்கீழ் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், இவற்றை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாளை (செப்டம்பர் 17) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் முதன்முதலாக நேரடியாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *