சிறுகதை

ஜாலிக்காக இப்படியா? | டிக்ரோஸ்

Spread the love

‘என்ன பெரிசா குடி முழுகிப்போச்சுன்னு இப்படி உம்முனு உட்கார்ந்து இருக்க.. கீதா’ என்று கேட்டபடி வந்தான் அவளது மூத்த அண்ணன் ராஜன்.

சுமார் மூன்று வருடமாக பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்த பிறகு இன்று சந்திக்கிறார்கள். இருவருக்கும் மனதில் ஏதோ புதிய வருடக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்பது போல் இருந்தது!

–––––––*****––––––––

கல்லூரியில் இரண்டாவது ஆண்டில் படித்துக்கொண்டு இருந்தாள் கீதா.

அவளது அண்ணன் ராஜன். சில பணக்கார நண்பர்களுடன் பரபரப்பான தி.நகரில் பிரபலமான ஆட்டம் பாட்டத்திற்கு பெயர் எடுத்த ஒரு மது பாரில் ராஜன். அதைப் பார்த்தவுடன் கீதா மனம் வேதனை கொண்டது.

அப்பா அமெரிக்காவில் மிக உயர்ந்த பணியில் இருப்பதால் அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்தவள் கீதா. அவள் நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு பலவித கட்டுப்பாடுகளுக்கிடையே வளர்க்கப்பட்டவள்.

பாட்டு கிளாஸ், நாட்டிய பள்ளி, விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் கால்பதித்து ஆரம்பப் பாடம் படித்தாலும் படிப்பில் கவனம் சிதறியதே இல்லை. சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. சைகாலஜியில் சேர்ந்து திறமையான மாணவி என்று பாராட்டப்பட்டவள் கீதா.

கீதா வரவில்லை என்றால் உடன்படிப்பவர்கள் முதல் சில பேராசிரியர்கள் வரை உடனே வீட்டிற்கு போன் அடித்துவிடுவார்கள்.

கீதாவின் திறமையால் ஏற்பட்ட ஈர்ப்பு அது!

பேட்மிட்டன் டீமில் சேர்த்துக்கொண்டால் வெற்றிகோப்பை எளிதில் வென்றுவிடமுடியும் என்ற நம்பிக்கை தரும் அசுர விளையாட்டு வீராங்கனை அவள் .

––––––––––––****––––––

அதே கல்லூரியில் முன்பு பி.எஸ்.சி. கணக்கு பிரிவு படிப்பை முடித்து வெளியேறிவிட்ட அவளது அண்ணன் ராஜனின் பெருமையை கல்லூரி வளாகத்தில் இவளிடம் பேசாதவரே இல்லை!

கணக்குப்பிரிவு மட்டுமின்றி, தமிழ்துறை ஆசிரியர்கள், விளையாட்டுதுறை பணியாளர்கள் மற்றும் கேன்டீனில் வேலைபார்க்கும் டீ மாஸ்டர் வரை ராஜனின் பெருமையை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்!

மாணவர் சங்கத் தேர்தலில் ஜெயித்தது முதல் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிபெறுவது வரை எல்லாவற்றிலும் ராஜனின் பெயர் அடிபடாமல் இருக்காது.

அதைபற்றி பலர் கூறக்கேட்டு தான் கீதாவும் அதே கல்லூரியில் படிக்க விரும்பி சேர்ந்துவிட்டாள்.

–––––––––******–––––––––

ராஜனுக்கு ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் அவனுக்கு பணியும் கிடைத்தது. ஓரளவு கை நிறைய சம்பளமும் இருந்தது.

ராஜனின் அப்பாவோ, ‘You have some more time, ஆகவே மேலே படிக்கலாமே, come to America, get more exposure’ என்று ஆலோசனை தந்த வண்ணம் இருந்தார். ஆனால் ராஜனுக்கு வேலையில் சேர்ந்து சம்பாதித்து தன் காலில் நிற்பதுதான் அலாதி ஆனந்தம் தந்தது.

–––––––––******––––––––

ஆனால் அந்த காலுக்குத்தான் திடீர் என ஓர் நாள் ஆட்டம் கண்டது!

நண்பர்கள் சகவாசத்தால் கல்லூரி காலத்திலேயே மதுவின் சுகத்தை உணர்ந்தான். பணியில் சேர்ந்த பிறகு அலுவலக நண்பர்களுடன் பணியிட தோழமைக்காக வாராவாரம் பார்ட்டிகளுக்கு போக ஆரம்பித்தான்.

வார நாட்களிலும் வேலை டென்சனை மறக்க பார் கலாசாரத்தில் சுகம் காண ஆரம்பித்தான்.

இதில் பல நாட்கள் ‘work at bar’ரும் உண்டு!

அம்மாவும் கீதாவும் பல முறை இதுபற்றி அவனிடம் எச்சரிக்கை விடுத்தாள். அவனால் போதை அடிமைத் தனத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதே போதையில் சிக்கித் தவித்தான்.

கீதாவின் தோழி லதா. ஒரு முறை லதா அவளது பிறந்த நாள் கொண்டத்திற்கு ஒரு பிரபல ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாள். அப்போது அங்கே ராஜன் அடையாளம் தெரியாத சிலருடன் குடித்துக்கொண்டு இருந்ததை கீதா பார்த்தாள்.

கீதாவும் கையில் ஓர் மது கிண்ணத்துடன் அவனிடம் சென்று ‘டேய் அண்ணா, எனக்கு போதை கொஞ்சம் ஓவராகிவிட்டது. வீட்டுக்கு போகலாமா? என காதில் கிசுகிசுத்தாள்.

இவ எங்க இங்கே என அதிர்ச்சி அடைந்தான் ராஜன். அன்றைய மாலைப் பொழுதில் தான் சாதித்ததற்குத்தான் இந்த அலுவலக பார்ட்டி என்பதால் படு ஜாலியாக இருந்த ராஜன், ‘ஓகே புறப்படுவோம், இந்த கிளாசை முடித்து விடுகிறேன். உன் கிளாஸ்..’ என சொல்லிக் கொண்டு இருந்தபோதே அதை மடக்கென ஒரே மூச்சில் குடித்துவிட்டு, ‘சீக்கிரம் வா.. போகணும்!’ என்றாள் கீதா.

உடன் இருந்தவர்கள், ‘டேய் ராஜன் உன் தங்கச்சிக்கு இவ்வளவு அவசரம் கூடாது. நீ புறப்படு’ என்று ஆலோசனை தர அவனும் தனது கிளாசை முடித்துவிட்டு புறப்பட்டான்.

–––––––––––*******––––––––

ஜாலிக்காக இப்படியா? அண்ணன் தங்கை இருவரும் மது குடிப்பதா ? அவர்கள் அம்மா கொதித்துப் போனார்.

அமெரிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பிவர கணவனுக்கு கட்டளையிட்டார்.!

–––––––––––*******––––––––

சில நாட்களில் மது அடிமைத் தன மருத்துவ சிகிச்சை மையத்தில் ராஜனும் கீதாவும் மருத்துவ ஆலோசகரின் இறுதி கட்டளைகளையும் மருந்து மாத்திரை அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு காருக்கு திரும்பி வந்த போது அங்கே அம்மாவின் கண்களில் ஒரு வித பயம் தெரிந்தது.

‘அம்மா, ஏன் கவலைபடுற, எல்லாம் சரியாகிவிட்டதே’ இது ராஜன்.

‘ஏம்மா இன்னமும் சோகமா இருக்கே. உன் கண்மையெல்லாம் கரைந்து பூச்சாண்டி மாதிரி இருக்குமா…’ இது கீதா.

அம்மா அருகிலிருந்த அப்பாவைப் பார்த்தார்.

‘‘Hey, don’t worry, I promise you ’’ இனி இந்த பைத்தியகாரத்தனமான மது போதை பக்கம் போகவே மாட்டோம்…’ என்று உறுதி தந்து ராஜனின் அப்பா மனைவி தோளில் தட்டி நம்பிக்கை வார்த்தை பேசினார்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜனின் குடும்பம் இழந்த மகிழ்ச்சி மீண்டும் திரும்பிவந்தது .

–––––

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *