ஜார்க்கண்ட், ஜன. 28–
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் முதல் தளத்தில் மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதிகாலை 2 மணி அளவில் முதலில் ஸ்டோர் ரூமில் தீப்பிடித்ததாகவும், அதன்பிறகு தீ தொடர்ந்து பரவியதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் போது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். மின் கசிவின் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 6 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
6 பேர் பலி
குறிப்பாக, மருத்துவர், அவரது மனைவி, அவர்களது மருமகன், மற்றொரு உறவினர் மற்றும் அவர்களது வீட்டு வேலை செய்பவர்கள் என 6 பேர் தீயில் சிக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்“தன்பாத்தில் உள்ள ஹஸ்ரா நினைவு மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பிரபல மருத்துவர் தம்பதிகளான டாக்டர் விகாஸ் மற்றும் டாக்டர் பிரேமா ஹஸ்ரா உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த செய்தியால் இதயம் கலங்குகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியடையட்டும், துக்கம் அனுசரிக்கட்டும், இந்த கடினமான துக்கத்தை தாங்கும் சக்தியை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.