செய்திகள்

ஜாபர் சாதிக் விவகாரம்: டெல்லியில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேர தீவிர விசாரணை நிறைவு

3 நாளில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விளக்கம்

சென்னை, ஏப். 03–

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தொடர்பாக, இயக்குநர் அமீரிடம் ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 11 மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில், ஊடக நண்பர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் 3 நாளில் சந்திக்கிறேன் என்று இயக்குநர் அமீர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 9-ம் தேதி டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.‌ மேலும் ஜாபர் சாதிக் தயாரிக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை கொடுத்தது தெரிய வந்தது.

தீவிர விசாரணை

மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவரும் சேர்ந்து லீ கேப் என்கிற உணவகத்தை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக ஜாபர் சாதிக் உடனான நட்பு மற்றும் அவருடன் சேர்ந்து தொழில் செய்து வருவது குறித்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. மேலும் இயக்குநர் அமீரின் வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமீரை அதிகாரிகள் விடுவித்தை அடுத்து அவர் சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *