சிறுகதை

“ஜானகியும் செல்வியும்”-ராஜா செல்லமுத்து

பெண் என்பவள் பெரும் பலம். அகிம்சை ஆயுதம்.அன்பை உருக்கி உயிரில் ஊற்றும் உன்னதப் படைப்பு. இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தில்

ஜானகியும் செல்வியும் இணைபிரியாத தோழிகள்.இருவரும் இரு நாசிகளில் இடம் மாறி மாறி சுவாசித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் மூச்சுக்காற்று என்னவோ ஒன்றாகத்தான் இருக்கும்.

இருவரின் நட்பைக் கண்டுச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் புன்னகை பூக்க மாட்டார்கள். பொறாமை தான் படுவார்கள் .

அந்த அளவிற்கு ஜானகியும் செல்வியும் ரத்தமும் சதையும் கலந்த ஒரு ஜீவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் ஒன்றாக ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தால் கூட இந்த அளவிற்கு அன்பு கிட்டி இருக்குமா ? என்பது சந்தேகம்தான். தாய்கள் இரண்டாக இருந்தாலும் தாய்மை ஒன்றாகவே இருந்தது.

பாவாடை சட்டைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும் ஒன்றாக இருக்கும் ஒற்றுமைப் பெண்கள்.

அவர்களின் அன்பை,பண்பை, சிரிப்பைப் பார்த்துப் பாராட்டுவதற்கு ஆட்கள் இல்லை. பரிகாசம் செய்யத் தான் முன் நின்றார்கள்.

அன்பின் உருவாக அன்னை தெரசாவின் அடிச்சுவட்டில் வாழ்ந்து வருகிறாள் ஜானகி.

எல்லார் மனதையும் மாயக் கண்ணாடி கொண்டு அளந்து பார்க்கும் கால விஞ்ஞானி. சிரித்துப் பேசி சிரமங்களைச் சறுக்க வைக்கும் பெண் சாமி.

ஜானகி பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது கூட அவளை அன்னை தெரசா வந்து விட்டாள் என்று தான் தோழிகள் பேசிக் காெள்வார்கள்.

அந்த அளவிற்கு இதயத்தில் ஈரம் அப்பி கிடக்கும் பெண் அவள். அதிகம் பேசுவாள். நல்லது செய்வாள் அத்தனையிலும் அன்பு தூக்கலாகவே இருக்கும்.

மனதில் பாசம் படிந்திருக்கும். நேசம் நிறைந்திருக்கும் .உச்சி முதல் பாதம் வரை அச்சில் வார்த்த அம்மன் சிலை அவள்.

‘செல்வியும் ஜானகிக்குச் சளைத்தவள் அல்ல. அதிகம் பேச மாட்டாள். அன்பைக் குறியீடாக காட்டுவாள். எதையும் வெளிப்படுத்தத் தெரியாதவள்; விரிந்து பரந்த வான்வெளி அவள்.

பூமி சுற்றுவது எப்படி கண்ணுக்குத் தெரியாதோ ? அதுபோல அன்பைச் சுற்றிச் சுற்றி வருபவள் செல்வி.இருவரும் பாசம் ததும்பி நிற்கும் நேசப்பறவைகள் .

வருடங்கள் கடந்தன.

திருமண வயதை ஒட்டி இருவரும் நின்றபோது

யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் ? என்று இருவருக்குள் விவாதங்கள் நடந்தன.

இருவரும் சேர்ந்து ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுதல் முறையன்று. அது நம் பண்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதை நினைத்துப் பார்ப்பதற்கே அசெளகரியமாக இருக்குமென்று சிரித்துக் கொள்வார்கள்.

நமக்கு வர்ற மாப்பிள்ளைகள், நம்ம நட்பைப் பிரிச்சிரக்கூடாது. நம்மோட அன்பை அழிச்சிடக் கூடாது. அப்படி மாப்பிள்ளைகளத் தாண்டி நமக்கு வரணும்

என்று செல்வி சொல்ல

ஆமா செல்வி. அப்படி மாப்பிள்ளைகள தான் நாம தேடிக் கண்டுபிடிக்கணும்

என்று ஜானகி சாென்னாள்

இருவரும் நகைச்சுவை கலந்த பேச்சில் தினமும் பேசிக் கொள்வார்கள்.

இவர்கள் பேசிக் காெண்ட சிறிது நாட்களில்,மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது.

தேடும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர்கள் கிழிக்கும் கோட்டுக்குள் நிற்காமல் எட்டியே நின்றார்கள்.

ஏம்மா இந்த காலத்துல நீங்க சொல்ற கட்டுப்பாட்டுக்குள்ள எல்லாம் யாரும் மாப்பிள்ளையா வர மாட்டாங்க. யாரைக் கல்யாணம் பண்றீங்களோ, அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள நீங்க போயிருங்க என்று பெற்றவர்கள் சொன்னால் கூட அதைக் காதில் வாங்குவார்களேயாெழிய இதயத்திற்குள் கொண்டு போக மாட்டார் .

தெய்வீகமான நம்ம அன்பு சரியா இருந்ததுன்னா, நாம நினைக்கிற மாப்பிள்ளைகள் கண்டிப்பா நமக்கு கிடைப்பாங்க என்று இருவரும் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.

இவர்களின் பிடிவாதத்திற்கு எந்த மாப்பிள்ளையும் கிடைக்கவில்லை. இருவீட்டார்களும் ஒன்றாகக் கலந்து பேசி இருவரையும் பிரிக்காத , மாப்பிள்ளைகள் தான் வேண்டுமென்று தேடி அலைந்தார்கள் .

அப்படி ஒரே அச்சில் சிலர் அகப்பட்டார்கள். அதில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்தார்கள்.

நம் அன்பிற்கும் நட்பிற்கும் இந்த மாப்பிள்ளைகள் குறுக்கே நிற்க மாட்டார்கள்

என்று இருவரும் தீர்மானித்து திருமணம் செய்ய முன் வந்தார்கள்.

செல்வி திருமணம் செய்தவர் இவர்கள் நட்பு வட்டத்தில் இல்லை என்றாலும் ஜானகி திருமணம் செய்தது செல்வியுடனும் ஜானகிடனும் நட்பாய் இருந்த ஒரு மனிதரைத் தான் .

அதைச் செல்வி சொல்லித்தான் ஜானகி கூட அவரைத் திருமணம் செய்திருந்தாள்.

ஜானகி நாம கல்யாணம் பண்ணிட்டா, தூரமா பாேயிருவாேம். நம்ம கட்டிக்கிட்டவங்க நம்ம அன்பை புரிஞ்சுக்கிருவாங்களான்னு தெரியல.

எனக்கு கல்யாணம் ஆயிருச்சு. ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல?

அதனால நாம ரெண்டு பேரும் இப்பிடியே இருக்கணும்னா, நம்ம ரெண்டு பேருக்குமான நண்பரையே நீ கல்யாணம் பண்ணிக்கணும் சரியா?

என்று அன்புக் கட்டளையிட்டுச் செல்வி சொல்ல

அதுவரையில் அந்த நண்பரை அப்படி சிந்திக்காத ஜானகி

செல்வி இட்ட பாசக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருவரின் நட்பில் திளைத்திருந்த அந்த நல்ல மனிதரையே திருமணம் செய்தாள் ஜானகி.

இருவரின் திருமண வாழ்வில் துணையாய் வந்தவர்கள், ஜானகி செல்வியின் அன்பைக் கொஞ்சம் கூடச் சிதைக்கவே இல்லை. அவர்கள் அன்பை மேலும் ஊக்குவித்தார்களேயாெழிய ஒருபோதும் குறை வைக்கவில்லை.

இருவர் திருமணமும் சற்று ஏறக்குறைய ஒரே வருடத்தில் தான் நடந்தேறின.

இருவருக்கும் ஏறக்குறைய அதே வருடத்தில் தான் குழந்தைகளும் பிறந்தன.

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஜானகிக்கு அந்தி வரும் நேரம் குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தையைத் தூக்கி ஜானகியின் கையில் கொடுத்தார்கள். இரு கைகளையும் ஏந்தி, அந்தச் சிசுவை தன் இதயத்தோடு அரவணைத்த ஜானகி,

தன் குழந்தையைப் பார்த்துப் பூரித்து,கண்களை அகலத் திறந்து ஆச்சர்யப்பட்ட ஜானகி,

ஐயாே ,என் புள்ள செல்வி மாதிரியே இருக்கிறாளே? என்று ஆனந்தத்தில் திளைத்தாள்.

ஜானகி பேசிய பேச்சைக் கேட்டுச் சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்

என்ன இது ? ஜானகி குழந்தை பெத்திக்கிருக்கா.அவ உறவுகளாேட சாயலைச் சொல்லாம அவ தோழியாேட சாயலைச் சொல்றாளே? என்று உற்றார்கள் விழிக்க,

அவ எப்பவுமே செல்விய அப்படித்தான பாப்பா. இது ஒன்னும் பெரிய வியப்பு இல்லையே? என்று சிலர் சொல்ல அந்த ஆச்சரியத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டார்கள்.

தன் தோழியையே பெற்றெடுத்திருக்கிறோம் என்ற சந்தோசம், ஆனந்தம் பெருகியது ஜானகிக்கு.

சில தினங்களில்

செல்விக்கு குழந்தைப் பிறந்தது. பிறந்த குழந்தையைச் செல்வியின் கையில் தூக்கிக் கொடுத்தார்கள்.

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் தன் கைகளில் பிறந்த சிசுவை ஏந்தி,

” இவன் என் ஜானகி போலவே இருக்கிறானே? என்று செல்வியும் சொல்லியிருக்கிறாள்.

செல்வியைச் சுற்றியிருந்த உறவினர்களுக்கும் ஒரே ஆச்சரியம்.

இப்படி ஒரு நட்பா? தங்கள் உதிரத்தைக்கொடுத்துப் பெற்ற பிள்ளைகளைத் தன் உறவுகள் போல இருக்கிறார்களே? என்று சொல்லாமல் தன் தோழியைப் போலவே இருக்கிறார்கள்? என்று இருவரும் சொல்கிறார்களே. இது சராசரி நட்பைக் கடந்த தெய்வீக நட்பு என்று தெளிவு கொண்டார்கள்.

தூய நட்பை ஆராதிக்கும் இந்த நல்ல தோழிகள் இந்த பூமி சுற்றும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்தின சாெந்தங்கள்

ஜானகியின் பெண் குழந்தையும் செல்வியும் ஆண் குழந்தையும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள்.

ஜானகியின் பெண் குழந்தை செல்வி போலவே இருக்கிறாள்.செல்வியின் ஆண் குழந்தை ஜானகி போலவே இருக்கிறான்.இருவரின் நடவடிக்கையும் ஒன்றாகவே இருக்கின்றன என்று சொந்தங்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

இன்றும் ஜானகியும் செல்வியும் இணைபிரியாத தாேழிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

வானம், பூமி இரண்டுக்குள் எது நடந்தாலும் இருவரும் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

ஜானகியின் குழந்தையும் செல்வியின் குழந்தையும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜானகி செல்வி இருவர் நட்பிற்கு மட்டும் இன்னும் நரை விழவே இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *