நாடும் நடப்பும்

ஜவுளி துறை வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி


தலையங்கம்


நமது பொருளாதாரத்தை மேம்படுத்த பிப்ரவரி மாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் இருந்த ஒரு அம்சம் உற்பத்தி சார் ஊக்கத் தொகையாகும்.

பல்வேறு துறைகளில் கடந்த 16 மாதங்களாக ஏற்பட்ட சரிவுகளுக்கு முக்கிய காரணம் கொரோனா பெருந்தொற்று என்பதை அறிவோம். ஆனால் அதற்கும் முன்பே சில பல துறைகளில் தேக்கநிலை இருந்தது.

அதில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்பட வேண்டிய சில துறைகள் மோட்டார் வாகனத் துறை, ஜவுளித்துறை, உணவு பதப்படுத்துதல் துறை போன்றவைகள் ஆகும்.

கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் மெல்லக் குறைந்து வரும் இந்நிலையில் சரிவைக் கண்டு துறைகளின் நலன் காக்கப் பிரதமர் மோடி கவனம் செலுத்தத் துவங்கி விட்டார்.

அதில் ஜவுளிதுறை பெரிய ஒதுக்கீட்டை பெற்று இருக்கிறது.

உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஜவுளித் துறைக்கு ரூ.10,683 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு 2021-–22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கவும் உற்பத்திசார் ஊக்கத்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மோட்டர் வாகன உதிரி பாகங்கள், மருந்து தயாரிப்பு, எரிசக்தி, பேட்டரி, சூரியசக்தி, உருக்கு, ஜவுளி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட 13 துறைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க படிப்படியாக இந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பண்டிகை காலம் நாடெங்கும் நெருங்கி விட்ட நிலையில் ஆடைகள் விற்பனை அதிகரிக்கும். இந்திய தயாரிப்புகளுக்கு புது ஊக்கம் தரும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.10,683 கோடி ஒதுக்கீடு இந்திய ஜவுளித்துறையை நவீனப்படுத்தவும் இருக்கிறது. இதனால் மேலும் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

செயற்கை நூல் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள், துணி உற்பத்தி மற்றும் 10 ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஜவுளி உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியாக நம்புகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *