செய்திகள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்காக தமிழக அரசு ரூ. 5 கோடி நிதி

சென்னை, செப்.8–

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்காக தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘‘கலைஞர் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்ததன் விளைவாக, தலைநகரில் இயங்கி வரும் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தமிழிருக்கை தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இந்திய மொழிகள் மையத்தின் (CIL) ஒரு பிரிவாக, தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்கு அரிய பங்காற்றி வருகிறது.

தலைநகரில் தமிழ் தனித் துறையாக, தனித்த அடையாளத்தோடு செயல்படுவதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பை அளிப்பதற்கும் ஏதுவாக, தமிழ் காக்கும் நமது அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.

வளமான, நுண்மையான, உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வாழ்த்துகிறேன்’’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.