டெல்லி, மே 27–
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, அஜய் மக்கான் உள்ளிட்டோர் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே கூறி இருப்பதாவது:–
ஜவகர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பி. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயக காவலர். அவருடைய ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், ஒற்றுமை ஆகியவை நமது தேசிய கடமையாகும். நாம் பல்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளில் பேசலாம், ஆனால் அது தடையை உருவாக்கக்கூடாது.
சம வாய்ப்பு வேண்டும்
எல்லா மக்களுக்கும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நம் நாட்டில் சிலர் மிகவும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சி அதே ‘நீதியின்’ பாதையை பின்பற்றுகிறது என்று கூறியுள்ளார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தீவிரமாக போராடி 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த ஜவகர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947 தொடங்கி 16 ஆண்டுகளாக அவர் பிரதமராக நீடித்தார். இந்திய வரலாற்றில் தொடர்ந்த 3 முறை பிரதமராக தேர்வானவர் என்கிற பெருமைக்குரிய தலைவராக இருக்கிறார். அவரது பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ந்தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நேரு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#jawarhalalnehru #chachanehru #congress #architectofindia #India #firstprimeministerofindependentindia #independentindia