புதுடெல்லி, டிச.18-
காளைகளுக்கு எந்த கொடுமையும் செய்யப்படுவதில்லை; நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்போது மதுரை பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிற ஜல்லிக்கட்டு, பொழுதுபோக்கு அல்ல; இது தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.
ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 8ந் தேதி உத்தரவிட்டது.
இது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகைசெய்து தமிழகத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)–2017 என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’, பிராணிகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் என பல தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளை ஒரே வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டது.
தமிழக அரசு தாக்கல்
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதத்தை மூத்த வக்கீல் கபில் சிபல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், அரசியல் சாசனத்தை மீறியதல்ல.
அரசியல் சாசனம் பிரிவு 32ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரிக்க முடியாதவை. ஏனென்றால், அவை குடிமக்களின் அல்லது நபர்களின் அடிப்படை உரிமை மீறல் பற்றிய கேள்விகளை எழுப்பவில்லை. ஜல்லிக்கட்டுக்காக காளைகள்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. அரசியல் சாசனத்தின்கீழ் பிராணிகளுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவில்லை.
கொள்கை ரீதியிலான விஷயங்களில் அரசு இயற்றுகிற சட்டத்தில் கோர்ட் தங்கள் சொந்த அளவீட்டைக் கொண்டு மாற்ற முடியாது.
ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்பது முற்றிலும் தவறான வாதம் ஆகும். காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு கால கட்டத்திலும் அரசு அதிகாரிகளால் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் (எஸ்.ஓ.பி.) வழங்கப்படுகின்றன. புதிய சட்டத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
ஜல்லிக்கட்டு, இந்திய விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, போலீஸ், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரின் தீவிர கண்காணிப்பில்தான் நடத்தப்படுகிறது. இந்த கலாச்சார விளையாட்டில் காளைகளை கொடுமைப்படுத்துதல் என்பது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டின்போது பாதகமான விளைவுகளை முடிந்தளவுக்கு குறைப்பதில் அரசு வெற்றி கண்டுள்ளது.
ஜல்லிக்கட்டு இருப்பதால்தான் காளை மாடுகளை வளர்ப்பது உறுதி செய்யப்படுகிறது. அப்படியில்லாவிட்டால் பால் கிடைக்குமே என்கிற பொருளாதார பலன்களுக்காக பசு மாடுகள் வளர்ப்பில்தான் முன்னுரிமை வழங்குவார்கள். ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்க்கப்படுவதால், அது நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதையும் மேம்படுத்துகிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் கூறப்பட்டுள்ளது.