செய்திகள்

ஜம்மு பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு எதிரொலி: ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் இன்று பலத்த பாதுகாப்புடன் துவக்கம்

சிறீநகர், ஜன. 22–

ஜம்மு புறநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு எதிரொலியாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜம்முவின் புறநகர் பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணத்தினால், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள நர்வால் என்ற பகுதியில் நிகழ்ந்து, 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் இந்திய ஒற்றுமைப் பயணம் மீண்டும் இன்று காலை 7 மணிக்கு சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியிலிருந்து தொடங்கியது. இதனால், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

தனது ஆதரவாளர்களுடன் தேசியக் கொடியினை கையிலேந்தி ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் சம்பா மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியினை கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 கிலோ மீட்டர் நடந்த பிறகு இந்தப் பயணம் இரவு நேர ஓய்வுக்காக சாக் நாக் பகுதியில் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.

ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து பேசிய அதிகாரிகள் கூறியதாவது:– ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்திய ஒற்றுமைப் பயணம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *