ஜூலை 25 ந்தேதிக்குள் ஆவணங்கள், பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு
டெல்லி, ஜூலை 11–
ஜம்மு காஷமீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பாரதீய ஜனதா அரசு நீக்கி நடவடிக்கை எடுத்தது தொடர்பான வழக்கை, இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 25 ந்தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஆகஸ்ட் 2 ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இன்று விசாரணை
இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த அரசியல் சாசன அமர்வில் சஞ்சய் கிஷன், சஞ்ஜீவ் கண்ணா, கவுல் பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகிய நீதிபகள் இடம் பெற்றிருந்தனர்.
ஜம்மு காஷமீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லுமா?, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது செல்லுமா என்பது தொடர்பாக இன்று விசாரணை நடத்த உள்ளதாக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஜூலை 25 ந்தேதிக்குள் அனைத்து மனுதாரர்களும், தங்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும், பதில் மனுக்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதி முதல் இந்த வழக்கு தினசரி அடிப்படையில் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நடத்தி முடிக்கப்படும் என்றும் அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.