ஸ்ரீநகர், ஆக. 29–
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு–காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என மெகபூபா முப்தி அறிவித்தார். அதேபோல பா.ஜ.க. தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது. இதையடுத்து, அங்குள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சராக இருந்தபோது 12,000 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய என்னால் முடிந்தது. அமைதி ஒப்பந்தத்தை முதலமைச்சர் பதவியில் இருந்த என்னால் அமல்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது ஜம்மு–-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிவிட்டதால் அதன் மூலம் முதலமைச்சருக்கு எவ்வித பெரிய அதிகாரமும் இருக்காது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஓர் உதவியாளரை மாற்ற வேண்டும் என்றால் கூட கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை ஏற்றுவிட்டால் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கட்சி சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும். எனவே, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ளார்.