செய்திகள்

ஜம்மு காஷ்மீர் குறித்து சீனா பேச்சு: இந்திய வெளியுறவுத் துறை பதிலடி

டெல்லி, மார்ச் 24–

பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்திருந்ததற்கு, ‘உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் குறித்து சீன அமைச்சர் தேவையின்றி கருத்து தெரிவித்துள்ளார்’ என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, “இஸ்லாமிய நண்பர்கள் பலர் காஷ்மீர் குறித்து இன்று நமது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதே நம்பிக்கையை சீனாவும் பகிர்ந்து கொள்கிறது” என்றார்.

இந்தியா பதிலடி

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சீன அமைச்சரின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். இதில், சீனா போன்ற நாடுகள் கருத்து சொல்தவற்கு உரிமை இல்லை. சீனாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் இந்திய கருத்து தெரிவித்ததில்லை என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்த இரண்டு நாள்களில், வாங் யீ டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இரண்டு நாடுகளும் ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், காஷ்மீர் குறித்த சீனாவின் கருத்துக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான், சீனா வெளியிட்டிருந்த கூட்டறிக்கைக்கும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.