ஸ்ரீநகர், ஆக. 28–
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றனர்.
பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக தகவல் வந்ததையடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையும் இணைந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
எல்லைப்பகுதியில் மேலும் பங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அந்த நபர்கள் யார்? எதற்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற இருக்கிறது. விசாரணை முடிவில்தான் அவர்கள் ஏன் ஊடுருவ முயன்றார்கள் என்பது தெரியவரும் என்று இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13ம் தேதி உரி செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் ஊடுருவல் முறியடிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





