செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

ஜம்மு–காஷ்மீர் அணைகளின் மதகுகள் மூடல் !

Makkal Kural Official

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்

ஸ்ரீநகர், மே 5–

ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் முக்கியமாக கடந்த 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கூறுகையில், “இது மிகப் பெரிய சாதனை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் நல்லது. நமது அரசாங்கம் பாகிஸ்தானுக்கு பல வழிகளில் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. நாங்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டது. மேலும், வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணைகளின் நீர் வெளியேற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத்–உலமா–இ-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். “யாராவது தண்ணீரை நிறுத்தினால், அதை நிறுத்தட்டும். இந்த ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் தண்ணீரை எங்கே கொண்டு செல்வீர்கள்? இது எளிதானது அல்ல. வெறுப்பின் ஆட்சியாக அல்லாமல், அன்பின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம், நான் இந்த நாட்டில் வாழ்கிறேன். ஆனால் இங்கு ஊக்குவிக்கப்படும் விஷயங்கள் நாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனிடையே, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கடந்த வாரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *