செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடி தலைமையில் 24–ந்தேதி ஆலோசனை

புதுடெல்லி, ஜூன் 20–

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகவும் அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் வரும் 24ம் தேதி மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வரும் 24ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

அந்த முடிவுக்கு முன்னதாகவே மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின.

தற்போது மீண்டும் மாநில அந்தஸ்து பற்றி ஆலோசிப்பதும் அதற்கு முன்னாள் முதல்வர்கள் மூவரையுமே அழைப்பதும் அரசியல் ராஜதந்திரமாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *